நடிகர்கள் நீட் தேர்வைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக சார்பில் இன்று திருச்சியில் நடைபெறுகிற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் 25 இடங்களில் வரவில்லை என்று கூறுகிறார். இதற்கு காரணம் நமது கல்வித்தரம் அப்படி இருக்கிறது. நாம் நமது கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனி நீட் தேர்வை நீங்கள் எதிர்க்க முடியாது. வேண்டுமானால் திமுக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்துங்கள். அவர் வருகிற 13 ஆம் தேதியும் ஒரு போராட்டம் அறிவித்திருக்கிறார். அவர் அந்த போராட்டம், இந்த போராட்டம் என்று பயமுறுத்தி மாணவர்களை தவறாக வழி நடத்துகிறார்,” என்று குற்றம் சாட்டினார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது குறித்து தமிழிசை கூறுகையில், சிஎம்சி மருத்துமனையில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன. சிஎம்சி மருத்துவமனையில் 80 சதவிகித இடம் சிறுபான்மையினருக்குத்தான் கொடுக்கிறார்கள். அந்த 80 சதவிகிதம் பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் அங்கு பெரும்பான்மையினருக்கு இடம் மறுக்கப்படுகிறதா?” என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் கூறுகையில், நடிகர்கள் எல்லாம் படிப்பவர்களைப் பற்றி பேசுவது மகிழ்ச்சிதான். ஆனால், அவர்கள் நீட் தேர்வு பற்றி தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு நீட் பற்றி என்ன தெரியும், இவர்கள் எல்லாம் பல கோடிக்கு நடித்துக்கொண்டிருக்கும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றிகொண்டிருந்தோம். அனிதாவைக் கொன்றது நீட் தேர்வு அல்ல, நீட் அரசியல்” என்று தமிழிசை கூறினார்.
அண்மையில், நடிகர் சூர்யா ‘தி இந்து’ நாளிதழில், இன்னொரு அனிதாவை உருவாக்கக் கூடாது! – தமிழர்கள் நாம் கைகோர்ப்போம்.. நம் குழந்தைகளின் கல்விக்காக! என்று கட்டுரை எழுதியிருந்தார். இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் சூர்யாவுக்கு நீட் பற்றி என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,”