eதிறப்பு விழா காணும் பையனூர் ஸ்டூடியோ!

Published On:

| By Balaji

பையனூரில் உருவாகிவருகிற எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத் தளம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

திரைப்படத் துறைக்காக சென்னை ஓஎம்ஆர் சாலை பையனூரில் அரசு சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய ஸ்டூடியோ உருவாக்கப்பட்டு வருகிறது. வியத்தகு சிறப்பம்சங்களுடன் உருவாகிவரும் இந்த ஸ்டூடியோ நாட்டிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோக்களுள் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்டூடியோ திறக்கப்படும்பட்சத்தில் இங்கேயே விதவித செட்டுகள் அமைத்து, படப்பிடிப்பை மேற்கொள்ளலாம். இதனால் வெளியூர்களுக்குச் சென்று செட்டுகள் போட்டு நேரம் மற்றும் பணம் ஆகியவற்றை விரயம் செய்வது குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் கட்டப்பட்ட இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்திற்கான திறப்பு விழா வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கவிருக்கிறது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதுடன் அதைத் திறந்தும் வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் பி.சுரேஷ், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தத் தகவலை திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share