திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் விஜயரகு. இவர் பாஜகவின் திருச்சி மண்டலச் செயலாளராக பதவி வகித்துவந்துள்ளார். இந்த நிலையில் இன்று (ஜனவரி 27) அதிகாலை காந்தி மார்க்கெட் பகுதியில் விஜயரகு சென்றுகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல், அவரை மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த அவரை அருகிலிருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயரகு உயிரிழந்தார்.
மொபைல் போன் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் விஜயரகு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
விஜயரகு கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை எதிரேயுள்ள சாலையில் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.�,