தீபாவளிப் பண்டிகைக்காக, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்வதற்காக 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். அதன்படி, நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து 9,200 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தீபாவளி முடிந்தபிறகு, சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்குத் திரும்புவதற்காக நவம்பர் 7 முதல் 10ஆம் தேதி வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு 4,207 பேருந்துகள் உள்பட11,842 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று (அக்டோபர் 31) முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை செயல்படும். கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய இடங்களில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு முன்பதிவு மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை கோயம்பேட்டில் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து, இன்று காலை 11 மணி முதல் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மக்கள் சிரமமில்லாமல் அவரவர் ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“கடந்தாண்டு சென்னையிலிருந்து 11,335 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தாண்டு 11,367 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்தாண்டு 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், 5 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதன்மூலம், 9.66 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. தற்போது, 1 லட்சத்துக்கு 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்துத் துறை உதவியுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதியன்று இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.�,