Eகூகுள் தேடலில் சமத்துவம்!

Published On:

| By Balaji

டிஜிட்டல் டைரி! 20 – சைபர் சிம்மன்

கூகுள் தேடல் சிறந்தது என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் அது அத்தனை சமத்துவம் இல்லாதது என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? பெண்கள் விஷயத்தில் கூகுள் தேடல் முடிவுகள் சமத்துவம் இல்லாமல் இருப்பதை உணர்த்தவும், அதை சரி செய்யவும் முயற்சிக்கும் வகையில் புதிய இணைய சேவை ஒன்று அறிமுகம் ஆகியிருக்கிறது.

பிரபலமான குரோம் பிரவுசரில் செயல்படக்கூடிய எக்ஸ்டென்ஷனாக அறிமுகம் ஆகியுள்ள இந்தச் சேவை, கூகுள் தேடலில் இருப்பதாகச் சொல்லப்படும் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை நீக்கிச் சமத்துவமான தேடலை முன்வைக்கிறது.

இந்தச் சேவை எப்படிச் செயல்படுகிறது, இதன் அவசியம் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன் முதலில் கூகுள் தேடல் சார்பு பிரச்சினை தொடர்பான பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

**கூகுளில் நிறம், பாலினம் சார்ந்த பாகுபாடுகள்**

கூகுள் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தேடியந்திரம். கூகுளில் எதைத் தேடினாலும் பதில் கிடைக்கும் என்ற கருத்தும் இருக்கிறது. கூகுளைப் பலர் சிறந்த தேடியந்திரமாகக் கருதுகின்றனர். இந்தப் பெருமைகளை எல்லாம் மீறி, ஒரு தேடியந்திரமாக கூகுள் பல விதமான சார்புகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

உதாரணமாக, கூகுள் தேடல் முடிவுகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தவரை முன்னிறுத்துவதாகவும், கறுப்பின மக்களுக்குப் போதிய பிரதிநித்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தைப் பரிசோதிக்க விரும்பினால், கூகுளில் பெண்கள் அல்லது இளம் பெண் என ஆங்கிலத்தில் தேடினால் தோன்றக்கூடிய படங்களில், பெரும்பாலான முடிவுகள் வெள்ளை இனப் பெண்களுடையதாகவே இருப்பதைக் காணலாம். கறுப்பினப் பெண்களின் படங்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன.

கறுப்பினப் பெண்களே கூகுள் படங்களில் தோன்றுவதில்லை எனச் சொல்ல முடியாவிட்டாலும், முதல் 50 படங்களில் 46 படங்கள் வெள்ளைத் தோல் கொண்ட பெண்களுடையதாக இருக்கின்றன.

இந்தத் தேடல் முடிவுகளை மேலும் குறிப்பாக மாற்ற விரும்பினால், அழகிய, கவர்ச்சியான, கர்ப்பிணி ஆகிய பதங்களை கூகுள் பரிந்துரைக்கிறது. ஆனால், ஆண்கள் தொடர்பான தேர்தலுக்கு கார்ட்டூன், கிகை ஸ்டைல், வயதான ஆகிய வார்த்தைகளை கூகுள் பரிந்துரைக்கிறது. ஆக, கூகுள் பெண்கள் என்றால் அவர்கள் தோற்றம் தொடர்பான பரிந்துரைகளையே செய்கிறது என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஜோனாதன் கோஹன் என்பவர் இது பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஏற்கனவே, சபியா நோபில் எனும் பேராசிரியர் கூகுள் தேடல் முடிவுகளில் வெளிப்படும் சார்புகளை விரிவான ஆய்வு மூலம் தனது அல்கோரிதம்ஸ் ஆப் அப்ரஷன் (Algorithms of Oppression ) எனும் புத்தகத்தில் அம்பலமாக்கியிருக்கிறார். இந்த புத்தகம் வெளியான பின், கூகுளின் பல தேடல் முடிவுகள் முன்பை விட மேம்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பொதுவாக கூகுளின் தேடல் முடிவுகளில் பலவித சார்புகள் மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.

கூகுள் இந்தச் சார்புகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதாக யாரும் குற்றம் சாட்டுவதில்லை. சமூகத்தில் இருக்கும் பல சார்புகள் கூகுள் தேடலிலும் பிரதிபலிக்கின்றன என்கின்றனர். இதற்கு, கூகுள் தேடல் முடிவுகளுக்கான அல்கோரிதம் உருவாக்கப்படும் விதம், அதன் புதைந்துள்ள சார்பு மனநிலை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

**அநீதியைக் களைய…**

இந்த பின்னணியில்தான் கூகுள் தேடல் முடிவுகளில் பெண்களுக்கு எதிரான சார்புகளைச் சரி செய்யும் வகையில், ஷி எனும் குரோம் எக்ஸ்டென்ஷன் சேவை அறிமுகம் ஆகியுள்ளது. இந்தச் சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள தளத்தில், இதன் நோக்கம், தேவை ஆகியவை பற்றி அழகாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேடல் மனித சமத்துவம் என்பதன் சுருக்கமாக ஷி எனும் ஆங்கில வார்த்தையாக இந்தச் சேவை அமைந்துள்ளது (S.H.E. – SEARCH HUMAN EQUALIZER). பேண்டீங் பிராண்ட் பொருட்களை தயாரிக்கும் பி அண்ட் ஜி நிறுவனத்தின் சார்பில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒவ்வொரு நாளும் உலகை மாற்றும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சமூகத்தில் நிலவும் கலாச்சாரச் சார்புகள் அவர்கள் சாதனையைச் சரியாக அங்கீகரிப்பதில்லை. மனிதச் சார்பைப் பிரதிபலிக்கும் தேடியந்திர முடிவுகள் இந்தப் பிரச்சினையை இன்னும் ஆழமானதாக ஆக்குவதாகவும், இதைச் சரி செய்யும் வகையில் தேடல் முடிவுகளைச் சரியாகத் தோன்றச்செய்யும் வகையில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்டென்ஷன் பின்னணியில் செயல்பட்டு தேடல் முடிவுகளை மேலும் பட்டைதீட்டி, பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் சமத்துவமான தேடல் முடிவுகள் தோன்றச்செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக, கூகுளில் சிறந்த விஞ்ஞானி என தேடிப்பாருங்கள். அதில் தோன்றும் முடிவுகளில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருக்கின்றனர் என்று பாருங்கள். உலகில் பெண் விஞ்ஞானிகள் இல்லையா என்ன? எனில் ஏன், சிறந்த விஞ்ஞானி என்று வரும்போது ஆண் விஞ்ஞானிகள் மட்டும் முன்னிறுத்தப்பட வேண்டும்?

அதே போல, சி.இ.ஓ. என்று தேடும் போது தேடல் முடிவுகளில் 10 சதவீதம் மட்டுமே பெண்கள் தொடர்பானதாக இருக்கிறது. உண்மையில், உலகில் 28 சதவீத பெண் சி.இ.ஓ.க்கள் இருக்கும் நிலையில், தேடல் முடிவுகள் இவ்விதமாக அமைவது பாரபட்சமானதுதானே.

இத்தகைய சார்புகளைச் சுட்டிக்காட்டி, தேடல் முடிவுகளில் சமத்துவம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் ஷி சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார்க்கலாம்.

இந்தச் சேவை செயல்படும் பதங்களின் நீளமான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பயிற்சியாளர்கள், சிறந்த இயக்குனர், சிறந்த கண்டுபிடிப்பாளர்கள், சிறந்த மாடல்கள், சிறந்த தயாரிப்பாளர்கள், சிறந்த முதலீட்டாளர்கள், சிறந்த ஒலிம்பியன்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பதங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதங்களுக்கு எல்லாம் சமத்துவமான தேடல் முடிவுகள் கூகுளில் தோன்ற இந்தச் சேவை வழி செய்கிறது.

தேடல் முடிவுகளில் பலவித அதிருப்தியை நீங்கள் எதிர்கொண்டிருக்கலாம். சமத்துவமின்மையையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதைச் சரிசெய்வதற்கான தேவையே [இந்தச் சேவையை](https://shetransforms.us/) உருவாக்கியுள்ளது.

[அஜீத் – விஜய்: யார் டாப் என்று அறிய வேண்டுமா?](https://minnambalam.com/k/2019/06/12/39)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share