eகிச்சன் கீர்த்தனா: மலபார் மீன் ரோஸ்ட்

Published On:

| By Balaji

கடற்கரையை அதிகம் கொண்டுள்ளதால் மீன்தான் கேரள மக்களின் முக்கிய உணவு. மீன் உணவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், ஒமேகா-3 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மீன் உணவு தயாரிப்பதில் இயற்கை மணம்கொண்ட தேங்காய் எண்ணெய் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த மலபார் மீன் ரோஸ்ட்டுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி அசத்துங்கள்.

**என்ன தேவை?**

மீன் – கால் கிலோ

வெங்காயம் (பெரியது) – ஒன்று (நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (நறுக்கவும்)

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)

கறிவேப்பிலை – சிறிதளவு

கெட்டி தேங்காய்ப்பால் – ஒரு கப்

புளிச்சாறு – ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

மீனைச் சுத்தம் செய்துகொள்ளவும். அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மல்லித்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் மீனை மசாலாவில் புரட்டி அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி புளிச்சாறு, தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் சிறுதீயில் வதக்கவும். பின்னர் வறுத்த மீன், தேங்காய்ப்பால் சேர்த்து சிறுதீயில் வைத்திருந்து நன்கு ரோஸ்ட் ஆனதும் இறக்கவும்.

[நேற்றைய ரெசிப்பி: மீன் கறி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/16/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share