ஆயுத பூஜை, விஜயதசமி கோலாகலங்களுக்கு இடையே தினந்தோறும் இல்லத்தரசிகளின் மண்டையைக் குடையும் கேள்வி, ‘இன்றைக்கு என்ன செய்யலாம்?’ வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். சிலருக்கு இனிப்பு, சிலருக்குக் காரம். இந்த இரண்டும் சேர்ந்த இந்த மசாலா கொழுக்கட்டை, வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல… நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் அசத்தும்.
**என்ன தேவை?**
நைஸாக அரைத்த புழுங்கலரிசி மாவு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா ஒரு கப்
கேரட் துருவல் – ஒரு கப்
இஞ்சி – பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
மாவுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு வேகவைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
**சிறப்பு**
எளிதில் ஜீரணமாகக்கூடியது. இரவு உணவாகவும் பயன்படுத்தலாம்.
[நேற்றைய ஸ்பெஷல்: பாகும் பதமும்](https://minnambalam.com/k/2019/10/06/1)�,