Eகிச்சன் கீர்த்தனா: பனீர் 65

Published On:

| By Balaji

கிட்ஸ் ஸ்பெஷல்

கோடை விடுமுறை முடிகிற தருணம். சுற்றுலா முடிந்து, உறவினர் வீடுகளின் விசிட்டும் முடிந்திருக்கும். அடுத்த இரு வாரங்களில் பள்ளிகள் திறக்கவிருக்கின்றன. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது சற்று சிரமம்தான். முக்கியமாக உணவு. வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, மாலைநேர உணவைச் சூடாகவும் சுவை மிகுந்ததாகவும் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப சுவை நரம்பைச் சுண்டியிழுக்கும் உணவு அமைந்துவிட்டால், பரிமாறுபவரைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட உணவு இந்த பனீர் 65.

**என்ன தேவை?**

பனீர் துண்டுகள் – 15 அல்லது 20

இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்

மைதா – கால் கப்

சோள மாவு – 4 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகள், இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். மைதா, சோள மாவு, உப்பை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பனீர் துண்டுகளை மைதா கலவையில் புரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டு வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறம் ஆனதும் எடுத்து எண்ணெயை வடிக்கவும். பனீர் துண்டுகளைத் தட்டில் வைத்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: தக்காளி சாஸ், சட்னி இதற்கு ஏற்ற சைடிஷ்.

**என்ன பலன்?**

இறைச்சிகள், பருப்புகளைப் போலவே பனீரிலிருந்தும் புரதச் சத்து அதிகம் கிடைக்கிறது. குறிப்பாக, சாதாரண பாலில் உள்ளதைவிட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவு. அதனால் நீரிழிவு உள்ளவர்களும் பனீரை தைரியமாகச் சாப்பிடலாம். பனீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துகளான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனைப் பெற முடியும்.

[நேற்றைய ரெசிப்பி: சாத பக்கோடா](https://minnambalam.com/k/2019/05/23/2)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share