கிச்சன் கீர்த்தனா: எக்லெஸ் ப்ளம் கேக்

Published On:

| By Balaji

கேக் என்பது மேல்தட்டு மக்களுக்கான இனிப்பாக மட்டுமே இருந்தது. 18ஆம் நூற்றாண்டில்தான் கேக், பிரெட் செய்வதற்கான சமையல் பாத்திரங்கள், கேக்குக்கான அடுப்பு போன்றவை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விலையில் கிடைக்கத் தொடங்கின. தொழிற்புரட்சியின் காரணமாகவே, கேக் என்பது எல்லா மக்களுக்குமான இனிப்பாக மாறிப்போனது. ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் வழியாகவே உலகமெங்கும் பல்வேறு உணவுகள் பரவின. கேக்கும் அப்படித்தான் இந்தியாவுக்கு வந்தது.

ஆனால், இப்போதும் கேக்குகளின் விலை கடைகளில் சற்று அதிகம்தான். அதுவும் கடைகளில் எக்லெஸ் கேக்குகள் என்றால் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்… எக்ஸ்ட்ரா விலை. அதனால் அவற்றை நம் வீட்டிலேயே செய்யலாமே என்று நினைப்பவர்களுக்கு இந்த எக்லெஸ் ப்ளம் கேக் உதவும்.

**என்ன தேவை?**

உலர்ந்த செர்ரி – 2 டேபிள்ஸ்பூன்

ஒன்றிரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

உலர் திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்

கறுப்புநிற உலர் திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்

டூட்டி ஃப்ரூட்டி – 4 டேபிள்ஸ்பூன்

கிரேப் ஜூஸ் – ஒரு கப்

பால் – அரை கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

பட்டைத்தூள் – அரை டீஸ்பூன்

சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்

மைதா மாவு – அரை கப்

பொடித்த சர்க்கரை – அரை கப்

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கேரமலைஸ் செய்ய:

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர் – 50 மில்லி

**எப்படிச் செய்வது?**

செர்ரி முதல் டூட்டி ஃப்ரூட்டி வரையிலான அனைத்தையும் கிரேப் ஜூஸில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுச் சூடேற்றவும். அது உருகி கேரமல் நிறத்துக்கு வரும். பிறகு அதில் 50 மில்லி தண்ணீர் சேர்க்கவும். இதுதான் கேரமலைஸ் செய்வது. இதைத் தனியே எடுத்துவைக்கவும். மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். அதில் சுக்குத்தூளும் பட்டைத்தூளும் சேர்க்கவும்.

பொடித்த சர்க்கரையில் வெண்ணெய் சேர்த்து நன்கு அடிக்கவும். அது க்ரீம்போல வர வேண்டும். இதை மாவில் சேர்க்கவும். கிரேப் ஜூஸில் ஊற வைத்த டிரை ஃப்ரூட்ஸ், கேரமல் கரைசல் ஆகியவற்றையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் ஊற்றி, ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுககவும்.

ஓவன் இல்லாதவர்கள் சாதாரண அடுப்பிலும் செய்யலாம். அகலமான பாத்திரத்தினுள் ஸ்டாண்டு வைத்து அந்தப் பாத்திரத்தை சூடுசெய்யவும்.பிறகு அதன் மேல் கேக் மாவு நிரப்பிய பாத்திரத்தை வைத்து மூடி, குறைந்த தணலில் 40-45 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கலாம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share