ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21ஆவது காமன்வெல்த் தொடரின் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுவருகிறது. முதலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி 5-0 என அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்துடன் மோதியது. அதிலும் இந்திய அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுக் காலிறுதிக்குள் நுழைந்தது.
கலப்பு அணிப் பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெண்கள் ஒற்றையர், பெண்கள் இரட்டையர், ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு அணி என மொத்தமாக 5 போட்டிகள் நடத்தப்படும் இதில் 3 வெற்றிகளைப் பெறும் அணி போட்டியைக் கைப்பற்றும். அதன்படி இந்தியா, மொரீஷியஸ் அணிகளுக்கு இடையேயான காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் சாத்ரிக் ரேங்கிரிடி மற்றும் சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி 21-12, 21-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி இருவரும் சிறப்பாக விளையாடி எளிதில் எதிரணியை வீழ்த்தி 21-8, 21-7 என நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.
இறுதியாக வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி மொரீசியஸ் வீரர் ஜூலின் பாலுடன் மோதினார். அதில் கிடம்பி 21-12, 21-14 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்தார்.
நாளை (ஏப்ரல் 8) நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியுடன் மோத உள்ளது. சிங்கப்பூர் அணி இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.�,