Eஅமைச்சர் சொல்வது உண்மையா?

Published On:

| By Balaji

கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் விரைவாகச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பொதுப்பணித் துறை விளக்கம் அளித்துள்ளது.

கேரளா, கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரியில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் வேதனைத் தெரிவித்தார்கள். அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீர், மூன்று நாட்களில் கல்லணைக்கு வந்துசேரும். அங்கிருந்து நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும், கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, வெண்ணாறு கல்லணை கால்வாய் மூலமாக டெல்டா பகுதிகளுக்கும், கொள்ளிடம் ஆற்றின் மூலம் அணைக்கரைக்கும் பாசனத்துக்கு வழங்கப்படுகிறது.

நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் அளிக்கப்படும்போது, நேரடி விவசாயம் பெறும் வாய்க்கால்களுக்குத் தண்ணீர் கடைமைக்கு விரைவாகச் சென்று பாசனப்பகுதிகளுக்கு விரைவாக வழங்கப்படுகிறது.

இதில், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், சரளைக்கற்கள் நிறைந்த பகுதியாக அமைந்துள்ளது. அங்கு 107 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளதால் கடைமடை பகுதிக்குச் சென்றடைய 75 நாட்கள் ஆகிறது. மேலும் உய்யகொண்டான் வாய்க்கால் மற்றும் வடக்கு கரை வாய்க்கால்கள் வழியாகக் கடைமடைக்குச் சென்று சேர 60 நாட்கள் பிடிக்கிறது.

கல்லணைக்குச் சென்றடைந்த பிறகு காவிரி 24 பிரிவுகளாகவும், வெண்ணாறு 17 பிரிவுகளாகவும், கல்லணைக் கால்வாய் 27ஆக பிரிந்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது. அவற்றில் காவிரி, வெண்ணாற்றில் நேரடியாகத் தண்ணீர் பெறப்படும் எட்டு ஆறுகளும், பாசனம், வடிகால் மூலம் தண்ணீர் பெறப்படும் 28 ஆறுகளும் அடங்கும். ஆறுகளில் பாசனம் செய்யப்பட்டு வடிய வைக்கப்படும் தண்ணீரை கொண்டு பாசனம் செய்யப்படும் ஐந்து வடிகால்கள் உள்ளன.

அவற்றில் நேரடியாகத் தண்ணீர் வழங்கப்படும் எட்டு ஆறுகளிலும், பாசனம், வடிகால் மூலம் தண்ணீர் அளிக்கப்படும் 28 ஆறுகளிலும் தண்ணீர் விரைவாக கடைமடைப் பகுதிகளுக்கும், பாசனப் பகுதிகளுக்கும் சென்றடைகிறது. எனவே கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்பது தவறாகும். இருப்பினும், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் விரைவாகச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு அளித்துள்ள விளக்கம் பிரச்சினையின் மையத்தைத் தொடாமல் சுற்றுகளை வெட்டுகிறது. காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளின் கிளை ஆறுகளும் அவற்றிலிருந்து பிரியும் வாய்க்கால்களுமே காவிரி வடிநில பரப்பில் பெரும்பகுதிக்கு பாசன வசதி அளிக்கின்றன. அந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் அவற்றில் நீர் ஏறிப் பாய்ந்து வயல்களைச் சென்றடையவில்லை. அப்படிச் சென்றால்தான் காவிரியின் கடைமடையைச் சென்றடையும்.

இதற்கு ஒதுக்கிய பணத்தை ‘வழக்கம்போல்’ வேலை செய்ததற்காகக் கூறுகிறார்கள். செலவிட்ட தொகை 36,800 வாய்க்கால்களுக்கும் சேர்ந்து ரூ.540 கோடி. இதில் 40 விழுக்காடு கட்டிங் போனால் மீதம் ரூ.300 கோடி செலவு செய்திருப்பதாய் கொண்டால்கூட ஒரு வாய்க்காலுக்குச் சராசரியாக ரூ.40,000 மட்டுமே ஆகியிருக்கும். இதில் என்ன மராமத்து செய்துவிட முடியும்?

இதனால்தான் ஆற்றில் வெள்ளம். வயல்களில் காய்ச்சல். அமைச்சர்களின் நழுவலான அறிக்கை.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share