வரும் 25ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தலானது, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே போட்டியிட்ட கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகியோரே முறையே திமுக மற்றும் அதிமுக சார்பாக மீண்டும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளுக்காக வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருக்கிறது. திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15 ஆம் தேதி, திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில்தான் நடைபெறும். ஆனால் உதயநிதி இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடைபெறவுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
உதயநிதி பொறுப்பேற்ற பிறகு இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்திற்கு தினந்தோறும் பல நிர்வாகிகள் வந்து செல்கின்றனர். இதுதொடர்பாக நேற்றைய [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2019/07/10/80), அறிவாலயத்தை விட அன்பகம்தான் இப்போது பரபரப்பாகியிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் அன்பகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் முறைப்படி மாவட்டச் செயலாளர்களுக்கு உதயநிதியை அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
�,”