அதிமுகவும் பாஜகவும் 100 சதவிகிதம் இணைந்துவிட்டன. அதனால்தான், இவர்கள் பா.ஜ.க சொல்படி செயல்படுகிறார்கள் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி ரிசார்ட்டில், இன்று(ஆகஸ்ட் 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:”ஆளுநர் எங்களை விரைவில் அழைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு 100 சதவிகிதம் இருக்கிறது. அப்படி ஆளுநர் அழைக்க வில்லையெனில், டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவெடுத்திருக்கிறோம்.
முதல்வர் பதவிக்கு எடப்பாடியைத் தேர்வுசெய்தது செல்லாது என்று மாஃபா பாண்டியராஜன் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு வாபஸ் பெறப்படாத நிலையில், அவரை எப்படி அமைச்சரவையில் சேர்க்க முடிந்தது? எதையுமே இவர்கள் சட்டப்படி செய்யவில்லை.
அதேபோல், சென்னையில் இன்று நடைபெறும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு எங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? அதிகார மமதையில் இருக்கிறீர்களா? இந்த அதிகாரம் எத்தனை நாள்களுக்கு உங்களிடம் இருக்கும்? இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான் ஆட்சி இருக்கும். ஆனால் கட்சி?. கட்சி இருந்தால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதனால்தான், சொந்தங்களையும் தொகுதி மக்களையும் மறந்து 22 எம்.எல்.ஏ-க்களும் மன வருத்தத்தோடு புதுச்சேரியில் தங்கியிருக்கிறோமே தவிர, யாரும் உல்லாசமாக வந்து தங்கவில்லை. எங்களுக்குக் கட்சி வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் ஒற்றுமையைக் காட்டிக்கொண்டிருக்கிறோம்.
மிக விரைவிலேயே நல்ல முடிவு வரும். மாநில அரசுக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டியதுதான் மத்திய அரசின் வேலை. ஆனால், அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் உட்கட்சிப் பிரச்னைக்கு இவர்கள் ஏன் இவ்வளவும் ஆர்வமும் வேகமும் காட்டுகிறார்கள்? அதற்கான காரணமும் எங்களுக்குப் புரியவில்லை.
அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் 100 சதவிகிதம் இணைந்துவிட்டது. அதனால்தான், பா.ஜ.க சொல்படி இவர்கள் செயல்படுகிறார்கள். எனவே, இவர்கள் கட்சியை வளர்க்கும் நிலைப்பாட்டில் இல்லை என்பது எங்களுக்குத் தெளிவாகிவிட்டது. எனவேதான், கட்சி முக்கியம் என்று நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராடுகிறோம்.
அம்மாவின் ஆட்சி நல்லாட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் நாங்கள் செயல்படுவோம். இந்த அரசை ஊழல் ஆட்சி என்று விமர்சித்த பன்னீர்செல்வம், தர்ம யுத்தத்தை முடித்துவிட்டு பதவியைப் பெற்றுக்கொண்டார். உண்மையில் அவர் நல்ல மனிதராக இருந்தால், துணை முதல்வர் பதவியைப் பெற்றிருக்கக்கூடாது. அவரை நம்பி இருந்தவர்களுக்குத்தான் பதவிகளைப் பெற்றுத்தந்திருக்க வேண்டும். பல முக்கியப் பதவிகளை வகித்த பன்னீர்செல்வம், இந்தப் பதவியைவைத்து என்ன சாதிக்கப்போகிறார்? இவர்களின் எண்ணம் முழுக்க பதவி சுகம் பற்றித்தான். தொண்டன் எல்லாம் இரண்டாம் கட்டம்தான் என்ற நிலைப்பாட்டில்தான் அவர்கள் இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.�,