வளர்ந்துவரும் நவீன யுகத்தில் அம்மா அப்பா சொல்வதைக் காது கொடுத்து கேட்கவே நேரமில்லாத சூழலாகிவிட்டது. இருப்பினும் ‘குழந்தைகள் தினம்’, ‘மகளிர் தினம்’, ‘காதலர் தினம்’ என எல்லாவற்றையும் கொண்டாடுகிறோம். ஆனால், முதியோர் தினத்தை மட்டும் பலர் கொண்டாடுவதோ, நினைப்பதோ இல்லை. கடந்து மட்டும் செல்கின்றனர்.
இப்போது எங்கு பார்த்தாலும் முதியோர் இல்லங்கள் தென்படுகின்றன. முன்பு ஆதரவற்ற அநாதைகள், குழந்தைகள் இல்லாத வயதான தம்பதியர், பார்க்கவே ஆள் இல்லாதவர்கள் என அவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் முதியோர் இல்லமும், அநாதை இல்லமும். ஆனால், தற்போது பெரு நகரங்களில் அதிகமாக முதியோர் இல்லங்கள் வளர ஆரம்பித்துள்ளன.
நம்மை வளர்த்து ஆளாக்கிய பெரியோர்களை இயந்திர வாழ்க்கையில் கவனிக்கத் தவறுகிறோம். வயதானால் அவர்கள் நமக்கு குழந்தைகள் என்பதை மறந்து விடுகிறோம். அக்கறையாக ஒரு வார்த்தை கேட்க மறந்து, தொல்லை என நினைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
மகன்கள், மகள்கள் இருந்தும் பணத்தைத் தேடி ஓடுவதால் அவர்கள் பெற்றோர்களைக் கவனிக்க நேரமில்லாமல், சிலர் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அந்த காலங்களில் வயதானவர்கள் என்றாலே எழுந்து மரியாதை தருவார்கள். தற்போது வயதானவர்கள் இருக்கும் இல்லங்களில் இவர்களின் அருமை புரிவதில்லை. ‘இந்த கிழடுகளுக்கு வேற வேலையே இல்ல’ என்றும், ‘வயசானாலே இப்படித்தான். கொஞ்சம் கம்முனு இருங்க’ என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் இக்கால இளைஞர்கள்.
கிராமங்களில் பாட்டிகள் சொல்லும் கை வைத்தியங்கள் பெரும்பாலான நேரங்களில் அனைத்து வியாதிகளுக்கும் இன்றும் தீர்வுக் கொடுக்கின்றன.
அவர்கள் காட்டும் அன்பையும் அக்கறையையும் இந்த நவீன யுகத்தில் தவறவிடுகிறோம்.
நம்முடைய சந்தோஷத்துக்காக, எது எதற்கோ கொண்டாட்டங்கள், நண்பர்களுடன் அரட்டை என்று சந்தோஷப்படுகின்ற நாம், என்றாவது ஒரு நாள் அவர்களோடு அமர்ந்து, “சாப்பிட்டிங்களா தாத்தா… நான் வெளில போறேன்… உங்களுக்கு எதாவது வேணுமா?” என்று அன்புடன் கேட்கலாமே.
ஒருதடவை கேட்டுதான் பாருங்களேன் அளவற்ற மகிழ்ச்சியைக் கண்கூடாகக் காணலாம். எதுவும் வாங்கிதர அவசியம்கூட இல்லை. ஆனால், இதுபோன்ற அன்பான வார்த்தைகளால் அவர்கள் மகிழ்வுறுவதைக் காணலாம்.
நண்பர்களோடு ஊர் சுற்றலாம், மனைவியோட சினிமா போகலாம், பள்ளி விடுமுறையா… டூர் போகலாம். இந்த ஒருநாள் வயதான தாத்தாவோ, பாட்டியுடனோ செலவிடுவோமே!
கிராமத்தில் இருந்து நவீன மயமாக மாற்ற வேண்டும், நகரத்து வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கஷ்டப்பட்டுப் படிக்கவைத்த பெற்றோர்களைக் கவனிக்க நேரமில்லாமல் இன்று அவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டோம்.
இனியாவது இதை கொஞ்சம் சிந்தித்தால் முதியோர் இல்லங்கள் மேலும் உருவாவதைத் தவிர்க்கலாம்.
நமக்குத் தான் பாட்டி, தாத்தா இல்லையே என நினைக்காமல் அருகில் இருக்கும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் சந்தோஷமாகப் பேசி அவர்களை மகிழ்வித்தாலே போதும்.
அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
*ஆனந்தி�,”