சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக தற்போது இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன் விரைவில் இப்பதவியில் இருந்து மாற்றப்படக் கூடும் என்று போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
2017 மே 31 ஆம் தேதி அப்போது தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹாவுக்கு பதிலாக ஏ.கே.விஸ்வநாதன் கமிஷனர் பொறுப்பை ஏற்றார். மூன்று வருடங்களைத் தொட மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் கமிஷனர் பதவியில் இருந்து விஸ்வநாதன் விரைவில் விடுவிக்கப்பட இருக்கிறார்.
மூன்று வருடங்களில் பெரிய அளவு சர்ச்சைகளில் சிக்காதவராக இருக்கும் விஸ்வநாதன், நகரம் முழுதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில் பெரிய அளவு சாதித்திருக்கிறார். இந்த பாசிட்டிவ் பாயின் ட்டுகள் இருந்தாலும், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடந்த சம்பவத்தால், சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுதும் அதிமுக அரசுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு போய்விட்டது. இஸ்லாமிய பெண்கள் மீது போலீஸ் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டதாக போராட்டக் காரர்கள் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கண்டித்தனர். இந்த சம்பவங்கள் முதல்வர் எடப்பாடிக்கு அதிருப்தியளித்திருப்பதாக தெரிகிறது. இது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து விளக்கினார் கமிஷனர் விஸ்வநாதன்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் என்ற உயரிய பதவியை அடைய முக்கிய அதிகாரிகள் பலர் கடும் போட்டியில் இருக்கிறார்கள். என்றாலும் ஜெயந்த் முரளி ஐபிஎஸ் பெயரே அடுத்த கமிஷனர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் இருக்கிறது. அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்களை கண்காணிக்க டிஜிபியால் தமிழகம் முழுக்க 12 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
கமிஷனர் விஸ்வநாதனைத் தொடர்ந்து சென்னை மாநகர போலீஸின் பல நிலைகளிலும் மாற்றங்கள் இருக்கும் என்றும் காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
**வேந்தன்**�,