உத்தரப்பிரதேசத்திலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். கொடியை அகற்றியதால் பல்கலையின் மூத்த பெண் அதிகாரி மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
உபி மாநிலம் மிர்சாபூரில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை (நவம்பர் 12) காலை ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் ஷாகா செய்துகொண்டிருந்தனர். அப்போது பல்கலையின் துணைத் தலைவரும், பேராசிரியருமான கிரண் டாம்லே. ‘பல்கலைக் கழகத்தில் குறிப்பிட்ட எந்த அமைப்புக்கும் இயக்கத்துக்கும் ஆதரவு கிடையாது’ என்று சொல்லி ஆர்.எஸ்.எஸ். கொடியை அகற்றச் சொல்லியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வளாகத்தில் போராட்டங்களை நடத்தினர். டாம்லேவை வெளியேற்றுமாறு கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் பிரிவு புகார் அளித்த பின்னர், மத நம்பிக்கைகளை அவமதித்த குற்றச்சாட்டில் காவல்துறை டாம்லே மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது.
திகைத்துப்போன அதிகாரி, “நான் என் நிறுவனத்தின் விதிகளை மட்டுமே பின்பற்றினேன். நான் ஷாகா உறுப்பினர்களிடம் கொடியை அகற்றும்படி கேட்டேன், ஆனால் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. எனவே நான் கொடியை எடுத்து ஊழியர்களிடம் கொடுத்தேன். மாணவர்கள் என்னைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் வற்புறுத்தியபோது, நான் கொடியை வளாகத்துக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னேன்” என என்.டி.டி.வி ஊடகத்திடம் கூறியிருக்கிறார் கிரண் டாம்லே.
இதற்கிடையில் இந்த பிரச்சினையை தீர்க்க மிர்சாபூரில் உள்ள மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பல்கலைக்கழக நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் செல்வி டாம்லேவுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்ததாகத் தெரிகிறது.
மாணவர்களின் போராட்டங்களின் போது ஆதரவு தெரிவிக்க அங்கே வந்த பாஜக எம்.எல்.ஏ. ரத்னக்கர் மிஸ்ரா, “ஆர்எஸ்எஸ் இப்போது பல ஆண்டுகளாக இங்கு ஷாகாக்களை நடத்தி வருகிறது. பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழக நிறுவனர் மதன் மோகன் மாளவியாவின் கடைசி விருப்பம், தான் தொடங்கிய எந்தவொரு நிறுவனத்திலும் ஷாகாக்கள் நடக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அவரது விருப்பத்தை டாம்லே புறக்கணித்துள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.
லோக்கல் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லலிதேஷ் திரிபாதி, “ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் நடத்தப்படக்கூடாது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உட்பட வெளி நபர்கள் ஏன் பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
ஆனாலும் தொடர் அழுத்தத்தால் ஆர்.எஸ். எஸ். கொடியை அகற்றிய பெண் அதிகாரி கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என்ற தகவல் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.�,”