திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணறுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க 19 மணி நேரமாக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று (அக்டோபர் 25) மாலை சுமார் 5:40 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாமேரி தம்பதியரின் மகன் சுர்ஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த 26 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
அவரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்புப் படையினர் உட்பட பலரும் அவரை மீட்டெடுக்க தீவிரமாக முயற்சி செய்தனர். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்க முயன்றனர் ஆனால் சில அடி தூரத்தில் பாறைகள் தென்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆழ்துளைக் கிணறுகளுக்குள் தவறி விழும் குழந்தைகளை மீட்பதற்காக உருவாக்கிய கருவியைப் பயன்படுத்தி அவரை மீட்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. தொடர்ந்து ஐஐடி குழுவினர் நவீன கருவி ஒன்று கொண்டு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பல மணி நேரமாக குழிக்குள் சிக்கியிருந்த குழந்தைக்கு தைரியமூட்டும் விதமாக, “அழுகாத சாமி, அழுகாத.. அம்மா எப்படினாலும் உன்னய மேல எடுத்துடுறேன் ” என்று அவரது தாயார் கூறியதற்கு குழந்தையிடமிருந்து ‘உம்’ என்று முனகல் சத்தம் பதிலாய் வந்தது. அவர் அளித்த நம்பிக்கையில் இரவு பகலாக குழந்தையை மீட்கத் தொடர்ந்து போராடி வருகின்றனர் ..
ஆனால் அதிகாலை 4 மணியளவில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 70 அடி ஆழத்திற்கு கீழே தள்ளப்பட்டார். இது அனைவரின் பதற்றத்தை அதிகப்படுத்தி அதிர்ச்சியைத் தந்தது எனினும் சிறுவனின் அழுகுரலும் மூச்சுவிடும் சத்தமும் கேட்டதால் குழந்தையை மீட்கத் தொடர்ந்து முயன்றனர் . அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் வளர்மதி போன்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்தனர். குழந்தையை மீட்க பல மணி நேரமாக போராட்டம் தொடர்ந்த நிலையில் குழந்தை அசைவின்றி காணப்பட்டார். எனினும் குழந்தையை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தது.
தொடர்ந்து 5 வெவ்வேறு குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. ஆறாவதாக புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழுவினர் குழந்தையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மணிகண்டன் குழுவினரின் முதற்கட்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில் மீண்டும் புதிய இயந்திரம் பொருத்தப்பட்ட ரோபோ கருவி மூலம் அவரை மீட்க முயற்சி செய்து வந்தனர். மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் பல்வேறு நவீன கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தை மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன் தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது .
�,”