வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திடீரென அறுந்த மூதாட்டி ஒருவரின் செருப்பை கழட்டி சரிசெய்து மாட்டிவிட்ட டிஎஸ்பியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வருகிற பிப்ரவரி 19ஆம் நடைபெறுகிற நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்றுதான் கடைசிநாள் என்பதால், ஏராளமானவர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதுபோன்று, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலும் வேட்புமனு தாக்கல் பணி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனால் குடியாத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைச் சரிசெய்வதற்காக டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் 50 காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் பணிகளை டிஎஸ்பி ராமமூர்த்தி கண்காணித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மூதாட்டி ஒருவர் நடந்து வந்தார். அப்போது அந்த மூதாட்டி அணிந்திருந்த செருப்பு அறுந்ததால் சாலையில் தடுமாறினார். இதை கவனித்த டிஎஸ்பி விரைந்து சென்று பாட்டியை தாங்கி பிடித்துக்கொண்டார். பின்பு மூதாட்டியின் செருப்பை கழட்டி, அதை சரிசெய்து மீண்டும் அணிவித்தார். தொடர்ந்து மூதாட்டி செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் பேருந்திலும் பத்திரமாக ஏற்றிவிட்டார். தற்போது இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் போலீசார் எல்லா நேரங்களிலும் எரிச்சலுடனும், கோவத்துடனும் முரட்டுதனத்துடனும் இருக்கமாட்டார்கள். தேவைப்படுகிற நேரத்தில் மக்களின் நண்பனாகவும் நடந்துக் கொள்வார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
**-வினிதா**