சிஏஏ போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. டெல்லி, அசாம், உபி என வடமாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது. அம்மாநிலங்களில் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர்.

இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது. குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை அடுத்து, தமிழகம் முழுவதும் அன்று இரவே தொடங்கிய போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறையின் தடியடியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து சென்னையில் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், சிஏஏ, என்பிஆர்-க்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டத்துக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன் மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லை மாவட்டத்துக்கு மகேஷ்குமார் அகர்வால், ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share