நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை அங்கீகரிக்கவும், பட்டியல் வெளியேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் புறக்கணிப்புக்கு இடையே புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது ஆதரவு அதிமுகவுக்கு இல்லை என்று அறிவித்தார்.
தேர்தல் முடிந்தும் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கணிப்பது என்று தேவேந்திர குல வேளாளார் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நவம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு மட்டுமல்ல, பங்கேற்பும் ஒரு போராட்டம்தான். தேவேந்திர குல வேளாளர் அரசாணை இன்னும் வரவில்லையே என்று கருதாதீர்கள். அதற்கான அரசாணை வரும். வந்தே தீரும். . தேசிய மாநில அளவிலான பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் அடையாள மீட்பு, பட்டியல் வெளியேற்றம் ஆகிய பிரச்சினைகளை மட்டும் முன் வைத்து கடைசி வாக்காளர் வரை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாக இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைந்திருக்கிறது. எனவே தேர்தல் புறக்கணிப்பு மட்டுமல்ல, தேர்தல் பங்கேற்பும் வலிமையான போராட்டமே. உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதை பட்டியல் வெளியேற்றத்துக்கான ஆதரவு வாக்கெடுப்பாக நாம் கருத வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிற டாக்டர் கிருஷ்ணசாமி,
“ உள்ளாட்சித் தேர்தலில் எண்ணற்ற போட்டியாளர்கள் இருப்பதால் அனைவரையும் சந்திக்க முடியும். எனவே புதிய தமிழகம் கட்சியின் களமாக இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த விவகாரத்தை வைத்து பற்பலர் பொய்யுரைகளையும், ஊருக்கு ஊர் தவறான பரப்புரைகளையும் செய்து வருகிறார்கள். இப்போது இந்த உள்ளாட்சித் தேர்தல் என்பது போலிகளைத் தோலுரித்து புதிய தமிழகம் கட்சியினர் இந்த கோரிக்கைகளை நம் மக்களிடையே எடுத்து செல்ல ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாதவர்கள், நம் கோரிக்கைகளை செவி சாய்க்காதவர்களைப் புறக்கணித்து நாம் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற பொறுப்பாளர்கள் உடனடியாக தேர்தல் பணிகளில் இறங்கி அன்றாடம் நடவடிக்கைகளை தலைமைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணசாமி.�,