‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

Published On:

| By Balaji

மயிலாடுதுறையில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப்பேருந்தை இயக்க முடியாததால் கோபமடைந்த ஓட்டுநர் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக அனைத்து பகுதிகளிலும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் பேருந்தில் பயணிப்பதால் கூட்ட நெரிசல் இருக்கும். 60 பேர் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் 100 பேர் வரை பயணிப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.

அதுபோன்றுதான், மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்தில் பயணிப்பார்கள். இதில், சில உள்கிராமங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுவதால் கூட்ட நெரிசல் இருக்கும். பள்ளி மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்வார்கள்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடி சென்ற அரசுப் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர். பேருந்தின் உள்ளேயும் கூட்டம், படியிலும் கூட்டம் இருப்பதால், பேருந்தை இயக்குவதில் ஓட்டுநருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த ஓட்டுநர் பேருந்தினை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வெகுநேரம் கழித்து ஓட்டுநரும் அங்கே வந்தார். போலீசார் அறிவுரையின்படி ஓட்டுநர் பேருந்தினை இயக்கி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share