தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி மாலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று பிப்ரவரி 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு ஆலைகளை மூடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை மார்ச் 3ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் ஆலைகளுக்குத் தமிழக அரசு சீல் வைத்து வருகிறது. இதனைக் கண்டித்து பிப்ரவரி 27ஆம் தேதி முதல் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலத்தடி நீரை எடுப்பதற்காக உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலைகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருந்த குடிநீர் கேன்கள் கடந்த 3 நாட்களாக வீடுகள், கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு விற்கப்பட்டன. போராட்டம் அறிவிப்பைத் தொடர்ந்து பலர் கூடுதலாகவும் குடிநீர் கேன்களை வாங்கினர். இந்நிலையில் சென்னை உட்பட ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்ந்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இதுமட்டுமின்றி கடைகளில் கூடுதல் விலைக்கு கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன .
இதனிடையே குடிநீர் உற்பத்தியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டு பிரச்சினைக்குச் சுமுக தீர்வு காண வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே சமயத்தில் இதுகுறித்து, நேற்று(பிப்ரவரி 29) செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அரசை அணுகவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நீதிமன்ற உத்தரவை மதித்து சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் உதவி கோரி அணுகினால் அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும். சென்னையில் தடையின்றி குடிநீர் கிடைக்கச் சென்னை குடிநீர் வாரியம் மூலம் மாற்று வழிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
**கவிபிரியா**�,