வடமாநிலங்களில் ஹோலி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கொரோனா வைரசை அரக்கனாகச் சித்தரித்து மக்கள் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டாடியுள்ளனர்.
**4000 பேரின் உயிரைக் குடித்த கொரோனா**
சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் 115 நாடுகளைப் பாதித்துள்ளது. வேகமாகப் பரவி வரும் இந்த வைரசால் இதுவரை சீனாவில் 80,754 பேர் உட்பட உலக முழுவதும் 1,14,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொரோனா குறித்த தகவலை வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்தவகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 3,831 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அதன் எண்ணிக்கை 4,027ஆக அதிகரித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
**இத்தாலி**
சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் இந்த வைரசின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்நாட்டில் மொத்தம் 9,172 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். 733 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக வோர்ல்டோமீட்டர் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் இத்தாலியில் பல்வேறு தடை கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளை ரத்து செய்தும், பொது இடங்களில் கூடக் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குத் திருமண நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
**எரிக்கப்பட்ட கொரோனா அரக்கன்**
இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 15 பேர் உட்பட 47 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு. கர்நாடகா, டெல்லி, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்களில் அதிகம் கூடக் கூடாது என்று மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்து, குடும்பத்தோடு ஹோலி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் கொரோனா வைரசை அரக்கனாகச் சித்தரித்துத் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டாடியுள்ளனர்.
மும்பையின் வொர்லி பகுதியில் அரக்கனின் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா வைரசை அரக்கனாகச் சித்தரித்து உருவ பொம்மை வடிவமைக்கப்பட்டது. அதன்பின்னர் தடுப்பூசி வடிவத்தில் நெருப்பு கொண்டு வரப்பட்டு கொரோனா அரக்கனை மக்கள் எரித்தனர். அகமதாபாத்திலும் கொரோனா அரக்கனை மக்கள் எரித்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக, ஹோலி கொண்டாட்டத்துக்காக வண்ண நீரை மற்றவர்கள் மீது தெளிக்கப் பயன்படுத்தப்படும் வாட்டர் துப்பாக்கிகள் போன்ற பொருட்களில் 25 சதவிகித பொருட்கள் மட்டுமே விற்க முடிந்ததாக கவுகாத்தி விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
**கவிபிரியா**
�,”