}அப்பல்லோவில் ராமதாஸ்: நலம் விசாரித்த எடப்பாடி

Published On:

| By Balaji

உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸ் (வயது 80) வயது காரணமாக வெளியூர்களுக்கு பயணித்து தீவிர அரசியலில் ஈடுபடாவிட்டாலும் அரசியல் விவகாரங்கள் குறித்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் நாள்தோறும் கருத்துக்கள் தெரிவித்துவருகிறார். ராமதாஸின் மகனும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணிதான் மாவட்டங்கள் தோறும் பயணித்து கட்சிப் பணிகளை கவனிக்கிறார்.

இந்த நிலையில் ராமதாஸ் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் உடல்வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, நேற்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், சிகிச்சை அளித்துவருகின்றனர். ராமதாஸுக்கு ஏற்கனவே இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

**முதல்வர் நலம் விசாரிப்பு**

அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று காலை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், அறையில் இருந்த சோபாவில் அமர்ந்து சிறிது நேரம் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் பாரதிமோகனையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ஏற்கனவே கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அவருக்கு டெங்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share