புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு காலத்தை 30 நாட்களிலிருந்து ஏழு நாட்களாகக் குறைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 2) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒருவர் கட்சி தொடங்குகிறார் என்றால் அது தொடர்பான அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் மற்றொரு உள்ளூர் மொழி என இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதையடுத்து அதுதொடர்பான விவரங்களைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து பொது வெளியில் அறிவிப்பு ஒன்றினை வெளியிடும். இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் பொதுமக்கள் யாராவது கட்சியின் மீது மறுப்போ, ஆட்சேபனையோ தெரிவிக்கலாம். இந்த 30 நாட்கள் முடிந்த பிறகு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் செயல்பாடுகள் தொடங்கும்.
இது தேர்தல் ஆணையத்தின் நடைமுறையாக இருந்து வந்த நிலையில், இந்த புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு காலத்தை 30 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைத்து அறிவித்துள்ளது. குறிப்பாக, தேர்தல் நடைபெறும் தமிழகம், அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 26 அல்லது அதற்கு முன் பொது அறிவிப்பை வெளியிட்ட கட்சிகளுக்கு அறிவிப்பு காலத்தை 30 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறைத்துள்ளது.
இந்த தளர்வு அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியான மார்ச் 19 வரையிலும் மற்றும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 7 வரையிலும் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கட்சியைப் பதிவு செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதாக தெரியவந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.
**-பிரியா**
�,