�அரசு முடிவு பாசிட்டிவ், தனியார் முடிவு நெகட்டிவ்: கர்ப்பிணிக்கு நேர்ந்த கொரோனா கொடுமை!

Published On:

| By Balaji

கொரோனா என்பது உடல் அளவிலும் மன அளவிலும் பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. கொரோனா சோதனைகள் பற்றிய குழப்பத்தையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புழல் பகுதியைச் சேர்ந்தவரும், மமகவின் மாநில இளைஞரணிச் செயலாளருமான ஷேக் முகமது அலி நம்மிடம் விரிவாகப் பேசினார்.

“புழல் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். இங்குள்ள அரசு மருத்துவமனையில் தொடர்ந்து செக்கப் செய்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு பிரசவம் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தேதி குறித்தனர். பிரசவத்துக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று சோதனை அவசியம் என்று கருதிய டாக்டர்கள், லட்சுமியின் மாதிரியை எடுத்து கிண்டி கிங்க்ஸ் லேபுக்கு அனுப்பினார்கள். ஜுன் 2 ஆம் தேதி அவருக்கு இந்த சோதனை செய்யப்பட்டது.

ஜூன் 5 ஆம் தேதி காலை உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது என்று சொன்ன மருத்துவர்கள், உடனடியாக ராயபுரத்திலுள்ள ராஜா சர் ராமசாமி முதலியார் அரசு மருத்துவமனை கொரோனா தடுப்புப் பிரிவில் லட்சுமியை சேர்க்க வேண்டும் என்று கூறினார்கள். லட்சுமி ஊட்டச்சத்துவியல் படிப்பு படித்திருக்கிறார். அதனால் கர்ப்ப காலத்திலும் குறிப்பாக கொரோனா தொற்று தாக்காமல் இருப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி மிக்க ஊட்டச் சத்துகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில், தனக்குக் கொரோனா இருப்பதாக அரசு மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி, இதில் சந்தேகம் அடைந்த நிலையில் உடனடியாக 5 ஆம் தேதி காலை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஹைடெக் தனியார் ஆய்வகத்துக்கு சென்று கொரோனா சோதனை செய்திருக்கிறார். அதன் முடிவு அன்று பிற்பகல் 2.30க்கு வந்திருக்கிறது. அந்த ரிசல்ட்டில் கொரோனா நெகட்டிவ் என்று வந்திருக்கிறது.

இதற்குள் சுகாதாரப் பணியாளர்கள் அந்த கர்ப்பிணிப் பெண்ணை ராயபுரத்திலுள்ள கொரோனா வார்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அரசு, தனியார் சோதனையில் மாறுபட்ட முடிவுகள் வந்திருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கும், குழப்பத்துக்கும் ஆளாகி அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என்ற முறையில் என்னிடம் தெரிவித்தார்கள்.

நான் இதுகுறித்து ராயபுரத்தில் இருக்கும் ராஜா சர் ராமசாமி முதலியார் அரசு மருத்துவமனை (ஆர்.எஸ்.ஆர்.எம்) அரசு மருத்துவர்களிடம் பேசினேன். அவர்கள், ‘சார் நாங்க கிண்டியிலுள்ள கிங்ஸ் லேபுக்கு அனுப்பி வைக்கிறோம். அஙகிருந்து கிடைக்கும் ரிசல்ட்டைதான் சொல்கிறோம். அதில் ஏதும் தவறு இருக்க வாய்ப்பில்லை. தனியார் ஆய்வக முடிவு தவறாக இருக்கலாம்” என்கிறார்கள்.

இதைச் சொல்லி ஹைடெக் தனியார் ஆய்வு நிலையத்தில் கேட்டோம். ‘நாங்கள் ஒவ்வொரு சோதனையையும் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறோம். எங்கள் முடிவில் மாற்றம் இல்லை. நீங்கள் நீதிமன்றத்துக்குப் போனால் கூட நாங்கள் இந்த முடிவை நிரூபிப்போம்’ என்று சொல்கிறார்கள்.

இப்படி இரு தரப்பும் சொல்லும் நிலையில் நாம் எதை நம்புவது. அரசு சோதனை முடிவை நம்புவதா? தனியார் சோதனை முடிவை நம்புவதா? அதுவும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை இப்படி கொரொனா நோயாளிகள் வார்டில் அடைத்து வைத்திருக்கிறார்களே என்ற பதற்றத்தோடு, ராயபுரம் சென்று அங்கே உள்ள மருத்துவர்களிடம் வாதிட்டோம். ஹைடெக் லேப் ரிசல்ட்டைக் காட்டி வாதிட்டோம். அவர்கள், கடைசியாக, அந்த பெண்ணை கூட்டிச் செல்லுங்கள். ஆனால் மீண்டும் கொரோனா சோதனை செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இப்போது அந்த கர்ப்பிணிப் பெண்ணை குடும்பத்தினர் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்” என்று சொன்ன ஷேக்முகமது அலி,

“ இப்போது மக்கள் எதை நம்புவது? கொரோனா இருக்கிறது என்று சொன்ன அரசு முடிவு தவறா? இல்லை என்று சொன்ன தனியார் முடிவு தவறா?ஒரு வேளை அவருக்கு கொரோனா இல்லாத நிலையில், கொரோனா நோயாளிகள் வார்டில் அடைத்து வைத்திருந்ததால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? மக்களின் உயிரோடு குறிப்பாக கர்ப்பிணிப் பெண்ணின் உயிரோடு இப்படி விளையாடலாமா?” என்று ஆவேசமாகக் கேட்கிறார் ஷேக் முகமது அலி.

அந்தப் பெண்ணுக்கு இரு சோதனைகள் செய்தவற்றுக்கான ஆதாரங்களையும் நம்மிடம் காட்டினார். இதற்கு அரசு தரப்பு விளக்கம் சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் இது மக்களின் உயிர்ப் பிரச்சினை. தனியார் ஆய்வகங்கள், அரசு ஆய்வகங்கள் எதன் முடிவு நம்பகத் தன்மையானது என்ற குழப்பம் இதனால் ஏற்பட்டிருக்கிறது!

**-ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share