இட்லி வார்க்கும் இல்லத்தரசிகளின் எவர்கிரீன் சந்தேகம், ‘இட்லியை எடுக்கும்போது துணியுடன், தட்டுடன் ஒட்டிக்கொள்கிறதே… எப்போது செய்தாலும் இட்லி கல் போலவோ, வழவழப்பாகவோ வருகிறதே… இதற்கு என்ன காரணம்? எப்படித் தவிர்ப்பது?’ என்பதாகவே இருக்கிறது. இதோ அதற்கான எளிய தீர்வுகள்…
இட்லி மாவு தயாரிக்க எந்த அளவு அரிசி, உளுந்து சேர்க்க வேண்டும் என்பதில் எல்லோருக்குமே ஒரு அளவு இருந்தாலும் சில சந்தேகங்கள் உண்டு. அதற்குத் தீர்வாக நான்கு கப் புழுங்கல் இட்லி அரிசிக்கு, ஒரு கப் உளுத்தம்பருப்பு எடுத்துக்கொள்ளவும். அரிசியை தலை தட்டியும், உளுந்தை தலை தட்டாமல் கோபுரம் மாதிரியும் எடுத்துக்கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை அரிசியுடன் ஊற வைத்துக்கொள்ளவும். அரிசி, உளுந்து இரண்டையும் கழுவி, தனித்தனியாக ஐந்து மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
முதலில் உளுந்தை நன்றாக அரைத்துக்கொள்ளவும். கிரைண்டரில் அரைக்கும்போது சூடானால், உளுந்துடன் ஐஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு மணி நேரம் உளுந்தை ஊறவைத்து, பிறகு ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம்வைத்து அரைத்தால் சூடாகாது. உளுந்து மாவும் நிறைய இருக்கும். இப்படி அரைத்தும் இட்லி மிருதுவாக வரவில்லை என்றால் சிறிதளவு அவல் எடுத்து அரை மணி நேரம் ஊறவைத்து அரிசியோடு சேர்த்து அரைத்தால் கண்டிப்பாக இட்லி மிருதுவாக இருக்கும்.
மாவில் அரை உப்பு சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டும். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து இட்லி வார்க்கும் முன் மீண்டும் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அரைத்ததுமே மாவில் அதிகம் உப்பு சேர்த்துக் கலந்து வைத்துவிட்டால், மாவு சீக்கிரம் புளித்துவிடும். இட்லியும் மிருதுவாக வராது.
இட்லி ஊற்றுவதற்கு காட்டன் துணி பயன்படுத்தாமல் அப்படியே இட்லி தட்டில் மாவை ஊற்றினால் இட்லி தட்டில் பிசுபிசு என்று ஒட்டத்தான் செய்யும். அதற்காக, வெறும் தட்டில் மாவு ஊற்றும்போது இட்லி குழிகளில் சிறிது எண்ணெய் தடவியபின் மாவு ஊற்றினால் தட்டில் இட்லி ஒட்டாமல் அழகாக வரும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் எண்ணெய் தடவி இட்லி ஊற்றும்போது சிலருக்கு அது பிடிக்காமல் போகலாம் அப்படியானவர்கள் இட்லி ஊற்றும்போது துணியில் ஒட்டாமல் சாஃப்டாக இட்லி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு முதலில் இட்லியை வைப்பதற்காக தனியாக சுத்தமான காட்டன் துணியைப் பயன்படுத்த வேண்டும்.
பலரும் இட்லி அவிப்பதற்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அளிக்கப்படும் வேட்டியைப் பயன்படுத்துகின்றனர். அந்த வேட்டியில் பாலிஸ்டரும் கலந்து இருப்பதால் சரியாக வராமல் போகும். அதனால், 100 சதவிகிதம் காட்டன் துணியை பயன்படுத்தி இட்லி அவித்தால் இட்லி ஒட்டாமல் வரும்.
அதோடு, அவசியம் அனைவரும் இட்லி துணியை துவைத்து வெயிலில் காயவைத்து உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இட்லி நன்றாக ஒட்டாமல் சாஃப்டாக வரும். இட்லியை ஊற்றும்போது ஒவ்வொரு முறையும் இட்லி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடேறியதும் இட்லி துணியை அந்த தண்ணீரில் நனைத்து பயன்படுத்தலாம். அப்படி இட்லி துணியை நனைத்து பயன்படுத்தும் இட்லி ஒட்டாமல் வரும்.
அதே போல, இட்லிக்கு ஊற்றும் மாவில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கலக்கி, பின்னர் இட்லி ஊற்றி அவித்து எடுக்கும்போதும் இட்லி ஒட்டாமல் அருமையாக வரும்.
இட்லி ஒட்டாமல் வருவதற்கு, இட்லியை அவித்த பிறகு, இட்லி தட்டில் இருந்து இட்லியை எடுக்கும் முன்னர் சிறிதளவு சுத்தமான தண்ணீரை இட்லி மீது தெளித்து எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் வரும்.
**[நேற்றைய ரெசிப்பி: சாமை சாதம் – குடமிளகாய் பருப்பு ரசம்](https://minnambalam.com/public/2021/10/16/1/little-millet-rice-and-pepper-dal-rasam)**
.�,