குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 18) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்திய முஸ்லீம் லீக், திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.. இதுவரை 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக தாக்கல் செய்த மனுவில், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யாத இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இது முஸ்லீம்களுக்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 14க்கும் எதிராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஜனவரி 22ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு, மனுதாரர்கள் சார்பில் அதுவரை இச்சட்டம் குறித்து எந்த வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள் குடியுரிமை சட்டத்திற்கு இடைக்காலத் தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கு அன்றைய தினத்துக்கு (ஜனவரி 22) ஒத்திவைக்கப்பட்டது.�,