hமுதல்வர் பதவி வேண்டாம்: உத்தவ் தாக்கரே

Published On:

| By Balaji

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், புதிய திருப்பமாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்துள்ள இந்தக் கூட்டணிக்கு மகா விகாஸ் அகாதி (பெரும் வளர்ச்சிக் கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று மும்பையில் நண்பகல் 12 மணி முதல், மூன்று கட்சிகளும் தனித்தனியாக தங்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

சிவசேனா கட்சி அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பான முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ளும். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் துணை முதல்வர்களாக பொறுப்பு வகிப்பார்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும். இதர அமைச்சரவைகள் கட்சியின் பலத்தைப் பொறுத்து பகிர்ந்தளிக்கப்படும். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சரிசமமாக அமைச்சரவை பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள, இரண்டு இடங்கள் மட்டும் குறைவாக காங்கிரஸ்க்கு வழங்கப்படும் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்களுடனான கூட்டம் முடிந்ததும், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக், “கூட்டத்தில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அரசு உருவாகும் வரை மும்பையில் தங்குவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. உத்தவ் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்துள்ளார்கள். இருப்பினும், இறுதி முடிவு சிவசேனா தலைவரால் எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பமாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவசேனா எம்.எல்.ஏக்களை சந்தித்த உத்தவ், புதிய முதல்வர் பதவியை மறுத்துள்ளார். சேனா எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பேசிய தாக்கரே, முதல்வர் பதவியை தான் விரும்பவில்லை என்றும் தன்னுடைய எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தினாலும் தனக்கு பதவி வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். மேலும், பாஜக நமக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று தனது முன்னாள் கூட்டணியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே.

இச்சந்திப்பிற்குப் பின்னர், என்.சி.பி தலைவர் சரத் பவார், தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**6 மாதங்கள் கூட ஆட்சி நீடிக்காது: நிதின் கட்காரி**

ராஞ்சி நகருக்கு இன்று மாலை வந்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி அமைக்க இருக்கும் ஆட்சி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய கட்காரி, “சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிஸ் கட்சி சித்தாந்தரீதியாக, கொள்கைரீதியாக மாறுபட்ட சிந்தனை உள்ளவர்கள். இவர்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கவே ஒன்றிணைந்துள்ளார்கள். இது துரதிர்ஷ்ட வசமானது. சந்தர்ப்பவாதமே இந்தக் கூட்டணிக்கு அடித்தளம். இந்தக் கூட்டணி முறையாக ஆட்சி அமைப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அப்படியே சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தாலும், 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் கூட நிலைக்காது” என்று தெரிவித்தார்.

இதனிடையில், சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை காலை மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும் என்று என்சிபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக அரசாங்கத்தை நடத்துவதற்கு மூன்று கட்சிகளும் முன்னுரிமை அளிக்கும் என்றும் மாலிக் கூறினார். “மூன்று கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து முடிவெடுப்பார்கள். அவர்கள் அனைத்து விஷயங்களையும் விவாதித்து இறுதி முடிவை எடுப்பார்கள். இன்று இரவு அல்லது நாளை காலையில் அரசாங்கத்தை அமைக்க நாங்கள் உரிமை கோருவோம்” என்று மாலிக் கூறினார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share