கன்னியாகுமரியில் தனியார் ரப்பர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கொல்லன் விளை பகுதியில் கேரளாவைச் சேர்ந்த குரியன் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆலையில் இன்று(அக்டோபர் 18) அதிகாலை 10 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரக் கோளாறு காரணமாக பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாலி மகத்(32) என்ற வடமாநில தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சிக்கிய ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த ஐந்து பேரும் தற்போது தக்கலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**
�,