அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, வெளிநாட்டு அரசாங்கத்தின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கியுடனான தொலைபேசி அழைப்பினால் இந்த நெருக்கடி நிலைக்கு ஆளாகியிருக்கிறார் டிரம்ப். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகியோரை விசாரிக்க உக்ரைனின் உதவியை டிரம்ப் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த முறையான விசாரணை ஒன்றை அந்நாட்டின் ஜனநாயக கட்சியினர் துவக்கியுள்ளனர்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், 2020 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு முன்னணியில் உள்ள ஜோ பிடனை விசாரிக்க டிரம்ப் உக்ரைன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார் என்ற தகவல்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.
அதே சமயம், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்துள்ள அதிபர் டிரம்ப், இதனை ‘PRESIDENTIAL HARASSMENT!’ எனக் கூறியுள்ளார்.
�,”