இந்தியாவில் 2017ஆம் ஆண்டு முதல் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது குடும்ப வன்முறை தொடர்பான கேள்விக்கு ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளர். அதில், “தேசிய குற்ற ஆவணக் காப்பகம், குற்றச்செயல்கள் குறித்த தகவலைத் தொகுத்து இந்தியாவில் குற்றச்செயல்கள் என்ற வெளியீட்டில் வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் குடும்ப வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களின் புள்ளி விவரங்கள் மாநிலம் வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் இடம் பெறுகின்றன.
குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005இன்படி 2016 முதல் 2020 வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 2016 ஆண்டில் 437 வழக்குகளும், 2017 ஆண்டில் 616 வழக்குகளும், 2018 ஆண்டில் 579 வழக்குகளும், 2019 ஆண்டில் 553 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆண்டு முதல் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
கடந்த 2020 ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3,748 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்தாண்டு கொரோனா இரண்டாவது அலையின்போது, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3,582 குடும்ப வன்முறை வழக்குகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் ‘காவல் துறை’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநிலப் பொறுப்பில் உள்ளவை. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது மற்றும் குடிமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது ஆகியவை அந்தந்த மாநில அரசாங்கத்தின் பொறுப்பு. தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் இதுபோன்ற குற்றங்களை கையாள மாநில அரசுகளுக்குத் தகுதி உள்ளது.
இருப்பினும், ஒன்றிய அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இது தொடர்பாக பல்வேறு சட்ட மற்றும் திட்டவட்டமான தலையீடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2006, வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961 உட்பட பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு, விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சமூகத்தில் திறன் கட்டமைப்பு, புலனாய்வு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோருக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட எட்டு நகரங்களில் (சென்னை, பெங்களூரு, டெல்லி, அமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை) பாதுகாப்பான நகரத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,