சமையலறை என்பது இல்லத்தரசிகளுக்குச் சலிப்பைத் தராமல் இருந்தால்தான் சமையலின் சுவையும் கூடும். அதற்கு சமையறை மேடை சரியானதாக இருப்பது மிக அவசியம்.
* சொந்த வீடு கட்டுபவர் என்றால், சமையலறை மேடையைச் சரியான உயரத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும் அல்லது கட்டிய வீட்டை வாங்கினாலும் சமையலறை மேடையும், சாமான்கள் வைக்கும் இடமும் வீட்டில் சமையல் செய்பவரின் உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம்.
* மேடை மிக உயரமாக இருந்தால், ஒவ்வொரு முறை சமைக்கும்போதும், எட்டி எட்டிப் பார்த்து, கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால், கை மற்றும் கழுத்துவலி வரலாம். இதன் தாக்கம் சமையலில் பிரதிபலிக்கும். மேலும், எட்டி எடுக்கும்போது பொருட்கள் கொட்டவும் வாய்ப்புகள் அதிகம்.
* சமையலறையின் நீள, அகலத்துக்கேற்ப மேடை அமைப்பதை பிளான் செய்ய வேண்டும். ‘L’ வடிவ சமையலறை பார்ப்பதற்கு அழகு. துலக்கிய சாமான்களைக் கவிழ்த்து வைக்க வசதியாகவும் இருக்கும்.
* ஸ்டவ்வுக்கும் சிலிண்டருக்குமிடையே மேடையில் துளையிட்டு அதனுள் டியூபைப் பொருத்துவது பாதுகாப்பானது. வேலை செய்துகொண்டிருக்கும்போது வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் டியூப் இடைஞ்சலாகாமல் இருக்க இது உதவும்.
* மேடையைச் சுற்றி விளிம்பு பகுதியில் ஓர் அங்குல அளவுக்கு டைல்ஸ் ஒட்டலாம். மேடையைத் துடைப்பதைவிட, தினமும் கழுவிவிடுவதுதான் சுத்தம். அதனால் சிங்க்குடன் இணைந்த மேடையின் ஓரத்தில் டைல்ஸ் ஒட்டினால் கழுவிவிட வசதியாக இருப்பதுடன், தண்ணீரும் வெளியே கசியாது.
* தினமும் மேடையைக் கழுவ முடியாதவர்கள் குறைந்தபட்சம் தினமும் அதைத் துடைப்பதுடன், வாரம் ஒரு முறை நன்றாக சோப்பு நீரால் கழுவிவிட்டால் எப்போதும் பளிச்சென இருக்கும்.
* மேடையில் ஸ்டவ்வுக்கு அருகிலேயே சப்பாத்தி இடுவதைத் தவிர்ப்பது நல்லது. பிறகு அந்த இடத்தைச் சுத்தப்படுத்துவது கடினம்.
* ஆயில் கேன் வைக்கும் இடத்தில் கீழே டிஷ்யு பேப்பரை வைத்து விடுங்கள். எண்ணெய் எடுக்கும்போது சிந்தினாலும், தரையில் படிந்து கறையாகாமல் இருக்கும்.
* ஸ்டவ் அருகில் காய்கறிகளை வெட்டுவது கூடாது. எப்போது காய்கறிகளை வெட்டினாலும், கீழே ஒரு பேப்பரை விரித்து வைத்து கட் பண்ணுங்கள். கறை படியாது.
* சமையலறை வடிவமைப்பின்போது டைல்ஸ் மற்றும் மைக்கா ஆகியவற்றின் கீழ்ப்பகுதியை அடர்த்தியான நிறத்திலும், மேல்பகுதியை வெளிர் நிறத்திலும் அமைத்தால், சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிமையாக இருக்கும்.
**[நேற்றைய ரெசிப்பி: குடமிளகாய் சாம்பார்](https://minnambalam.com/public/2021/02/20/1/Capsicum-sambar)**�,