ஃபோர்டு மோட்டார்ஸ் – மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபோர்டு மோட்டார்ஸ் – மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க பல மாதங்களாக ஒப்பந்தத்தை உருவாக்கி வருகின்றன. ஃபோர்டு 49 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் என்றும், மஹிந்திரா 51 சதவிகிதத்தை வைத்திருக்கும் என்றும் இதுகுறித்து ராய்ட்டர்ஸ் கடந்த ஏப்ரல் மாதமே தெரிவித்திருந்த நிலையில், அடுத்த வாரம் இந்த நிறுவனங்கள் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில், சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் பகுதியில் அதன் இரண்டு உற்பத்தி ஆலைகளைச் செயல்படுத்தி வருகிறது. குஜராத் மற்றும் சென்னையில் உள்ள ஃபோர்டு ஆலைகளில், அதிகபட்சமாக ஆண்டுக்கு 4,40,000 வாகனங்கள் உற்பத்தியைச் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் குஜராத்தில் வாகனங்களை உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியையும் செய்து வந்தது ஃபோர்டு.
சென்னையில் உள்ள தொழிற்சாலை 1995ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆண்டுக்கு 2,00,000 வாகனங்கள் மற்றும் 3,40,000 என்ஜின்கள் இங்கு உற்பத்தியாகி வந்துகொண்டிருக்கின்றன. ஃபோர்டு சென்னையில் ஈக்கோ ஸ்போர்ட் மற்றும் எண்டெவர் ஸ்போர்ட் வாகன மாடல்களை உருவாக்குகிறது.
சனந்த் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வாகன ஏற்றுமதியை வழங்குகிறது. சென்னை முதன்மையாக உள்நாட்டு சந்தைக்கு வழங்க பயன்படுத்தப்படுகிறது.
2015ஆம் ஆண்டு குஜராத்தில் தொடங்கப்பட்ட சனந்த் உற்பத்தி ஆலையை, கடந்த இரு வாரங்களுக்கு முன் தொடர்ந்து நிலவிவரும் பொருளாதார மந்த நிலையால் ஃபோர்டு அதனை மூடி விட முடிவு செய்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.
புதிய கூட்டு நிறுவனம் தொடங்கப்பட இருக்கும் நிலையில், ஃபோர்டு குஜராத்தில் உள்ள தனது ஆலையை மட்டும் வைத்திருக்கும் என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் நடக்கக்கூடிய இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு தான், இது குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும்.
லாபம் ஈட்ட பங்குதாரர்களின் மத்தியில் ஃபோர்டு நிறுவனத்துக்கு ஏற்பட்ட அழுத்தத்தின் கீழ், அடுத்த சில ஆண்டுகளில் ஃபோர்டு, 11 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் உலகளவில் தனது வணிகங்களை மறுசீரமைத்து வருகிறது.
ஃபோர்டு செய்தித் தொடர்பாளர் இந்த ஒப்பந்தம் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் ஃபோர்டு, மஹிந்திராவுடன் வணிக, உற்பத்தி மற்றும் வணிக செயல்திறனை அடைய உதவும் ஒத்துழைப்பின் வழிகளை வளர்ப்பதற்காக ஈடுபட்டுள்ளது என சமீபத்தைய பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த இருபது வருடங்களாக ஃபோர்டு இந்தியாவில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. இந்திய கார் சந்தையில் ஃபோர்டு, சுமார் 3 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. அதே சமயம், மாருதி சுஸூகி 50 சதவிகித பங்கைக் கொண்டு முதல் இடத்தில் இருக்கிறது.
கடந்த சில வருடங்களாக ஃபோர்ட் கடும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில் மஹிந்திராவுடனான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. ஃபோர்டு பிராண்ட் கார்கள் தொடர்ந்து இந்தியாவில் தயாராகி, புதிய நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றன.
மஹிந்திராவுடனான இந்த ஒப்பந்தம், ஃபோர்டு இந்தியாவில் முதலீடு செய்த பணத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,