தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை எனக் கூறி போராட்டம் தொடங்கிய நாள் முதல் ஐந்து மருத்துவர்கள் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ரமாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின்.மருத்துவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் 30, 31ஆம் தேதிகளில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இச்சங்கத்தின் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினருடன் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பல மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. பின்னர் இவர்கள் உடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்கிறது. இவர்கள் இதுவரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவோஅல்லது கைவிடுவதாகவோ அறிவிக்கவில்லை. இதற்கிடையே அரசுக்கு ஆதரவாக உள்ள ஒரு சங்கத்தை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.�,