k11, 12 வகுப்பில் பழைய பாடத்திட்டமே தொடரும்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் பழைய பாடத் திட்டமே தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 11,12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. புதிய பாடத்திட்டங்களின் படி, பகுதி 1ல், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பகுதி 2ல் ஆங்கிலம், பகுதி 3ல் முக்கியப் பாடங்கள், அதில் முதல் பிரிவு கணிதம், இயற்பியல், வேதியியல் என்றும், இரண்டாம் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல் என்றும், மூன்றாம் பிரிவு கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் என்றும், நான்காம் பிரிவு வேதியியல், உயிரியல், மனையியல் என புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது. மொத்த மதிப்பெண்களும் 500ஆகக் குறைக்கப்பட்டது.

இதற்கு ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் இன்று (ஜூலை 6) பழைய பாடத் திட்டமே தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலில், மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், வேலை வாய்ப்புக்கு ஏற்றதாகப் பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி, நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020 – 21ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டுக்கு இதனை நடைமுறைப்படுத்த உத்தரவு வெளியிடப்பட்டது.

இரண்டாவதாக அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளிக் கல்வி இயக்குநர், மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் / வேலை வாய்ப்புகள் சுருங்க நேரிடும். இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பல்வேறு நாளிதழ்கள் மூலமாக அரசுக்குக் கோரிக்கைகள் விடுத்தனர்.

இதனை அரசு பரிசீலனை செய்து, 2020 – 21ஆம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளைக் கொண்ட பாடத் திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும், புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share