அதிகாரிகள் துணை இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் மேலும் பல மாணவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 207 ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாததால் அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீரன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவைச் செப்டம்பர் 27ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கிருபாகரன், இதுதொடர்பாக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இம்மனு மீண்டும் இன்று (அக்டோபர் 4) விசாரணைக்கு வந்த போது, எத்தனை மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர், எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இவ்விவகாரத்தில் ஒரே ஒரு இடைத்தரகருக்குத்தான் தொடர்புடையது என்று கூறுவதை நம்பமுடியவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் அதிகாரிகளின் துணை இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர். ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து அக்டோபர் 15ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையே நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் ஜாமீன் கோரி தேனி குற்றவியல் நடுவர் விரைவு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதுபோன்று சிபிசிஐடி தரப்பில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் இர்ஃபானை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி ரூபணா, ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இர்ஃபானை காவலில் எடுக்கக் கோரிய மனுவை, சேலம் நீதிமன்றத்திலிருந்து வழக்கு குறித்த ஆவணம் கிடைத்த பிறகே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.�author��dateModified�2019-10-04T13:18:04+5:30�urltag�DNeet-would-not-have-occurred-without-the-help-of-,