இடைத்தேர்தல் பிரச்சாரம்: கடைசி வரைக்கும் பாய்ந்த பணம்!

Published On:

| By Balaji

வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று (அக்டோபர் 19) மாலை ஆறு மணியோடு பிரச்சாரம் முடிவடைந்தது. இதையடுத்து தொகுதிக்குள் இருக்கும் வெளியூர் கார்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், வெளியூர் கட்சிக்காரர்கள் பலரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று கடைசி கட்ட பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நாங்குநேரி தொகுதியில் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டியில் ஸ்டாலினும், விஜயகாந்தும் ஒரே நேரத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டதால் தொகுதியே பரபரத்துக் கிடந்தது. விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவதற்கு ஒப்புக் கொண்டது அதிமுகவுக்கு குறிப்பாக அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

ஸ்டாலினுக்கு வருவதை விட விஜயகாந்துக்கு அதிக கூட்டம் வரவேண்டும் என்று நேற்றே உத்தரவிட்ட சி.வி. சண்முகம் இதற்காக கூட்டணிக் கட்சியினருக்கு என தனி பட்ஜெட்டே ஒதுக்கிவிட்டார். தேமுதிக, பாமக ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தனித்தனியே வைட்டமின் ப கொடுக்கப்பட்டு விஜயகாந்த் வரும் பாயின் ட்டுகளில் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதேபோல திமுகவினரும் ஸ்டாலின் வரும் வழியெங்கும் மக்கள் கூட்டத்தை காட்ட அதிரடியாக பணத்தை செலவழித்தனர்.

விஜயகாந்த் விக்கிரவாண்டியில் ஆரம்பித்து, கஞ்சனூர், சூரப்பட்டு, கானை என நான்கு பாயின்ட்டுகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஸ்டாலின் இதற்கு எதிர்த்திசையில் இருந்து அதாவது திருவாமுத்தூர் தொடங்கி, ஒரத்தூர், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி என தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இதனால் இந்தப் பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் நேற்று இரவு முதலே குட்டியானை, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மறுநாள் கூட்டத்துக்காக ஆட்களை கூட்டிச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. விடியும் வரை அந்த கிராமத்திலேயே காத்திருந்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு பிரச்சாரப் பாயிண்ட்டுகளுக்குக் கொண்டு சென்றனர். ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் கொடுக்கப்பட்டது. சில கிராமங்களில் டிமாண்டுக்கு ஏற்றாற்போல் 300 ரூபாய் வரைக்கும் தலைக்குத் தரப்பட்டது. இன்னும் சில கிராமங்களில் அவர்களே பேசி முடிவெடுத்து பாதி கூட்டம் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கும், பாதிக் கூட்டம் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கும் செல்வதாக முடிவெடுத்து பிரித்துக் கொண்டனர்.

ஸ்டாலின் இன்று இறுதிக் கட்ட பிரசாரத்தில் எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பதினைந்து ஆண்டுகள் பின்தங்கிய சூழ்நிலைக்கு போய்விட்டது.இதனை மீட்டெடுக்க வேண்டிய முக்கிய காலக்கட்டத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விஜயகாந்த், ‘அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள்’ என்ற வார்த்தைகளை மட்டுமே உச்சரித்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இடைத்தேர்தலின் இறுதிகட்ட பிரச்சாரம் வரைக்கும் பணம் பாய்ந்தது கண் கூடாகத் தெரிந்தது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share