bபிரேமலதா வருமான வரி அதிகாரியா? திமுக

Published On:

| By Balaji

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி தொடர்பாக பிரேமலதாவிடம் ஏன் விளக்கம் அளிக்க வேண்டுமென திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடியும் நிதி கொடுத்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் திமுக அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. இதற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேர்தல் நிதி விவகாரம் தொடர்பாக திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை (செப்டம்பர் 30) செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இதற்குப் பதிலளித்திருக்கிறார்.

“அதிகாரபூர்வமாக நாங்கள் செய்த செலவைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். அரசு அதிகாரம் பெற்ற அரசு எந்திரங்களிடமே எங்களின் கணக்கை ஒப்படைத்திருக்கிறோம். இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் நாங்கள் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? அவர் வருமான வரித் துறை அதிகாரியா என்ன?” என்று தனது பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தேர்தல் நேரத்தில் ரூ.1,000 கோடி வரை செலவழித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசு விரிவாக விசாரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும் எனவும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். டி.கே.எஸ்.இளங்கோவனின் பேட்டி அவருக்கும் பதிலளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share