அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் சிறை செல்லவில்லை என ஊடக விவாதம் ஒன்றில் நெறியாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் கேள்வியெழுப்ப இந்த விவகாரம் சர்ச்சையானது. இதுதொடர்பாக இடைத்தேர்தல் நேரத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை. மிசா காலத்தில் சிறை சென்றார். அவர் ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்ததற்காக அடிவாங்கவில்லை. தனது தவறான செய்கைகளுக்காகவே அடிவாங்கினார்” என தெரிவித்தார்.
இதனால் அமைச்சர் பாண்டியராஜனுக்கு திமுகவினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்துவருகிறது. சென்னை அண்ணா நகரில் அவரது உருவபொம்மையை நேற்று எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அத்தோடு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பல இடங்களில் போராட்டம் நடந்துவருகிறது.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!
முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன் !#இனம்புரியாத_தெளிவு— Pandiarajan K (@mafoikprajan) November 6, 2019
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (நவம்பர் 7) எதிர்வினையாற்றியுள்ள அமைச்சர் பாண்டியராஜன், “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அண்ணா நகர் சாந்தி காலனியில் மாஃபா பாண்டியராஜன் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தெருவின் இரு புறங்களிலும் பேரிகார்டு அமைத்து சுமார் 10க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் மாஃபா பாண்டியராஜனின் சொந்தத் தொகுதியான ஆவடியில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசர் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 1000 பேருக்கு மேல் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அமைச்சரைக் கண்டித்தும், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர்.
�,”