கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க நிரந்தர அமைப்பை உருவாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மாதவ் காட்கில் மற்றும் கஸ்தூரி ரங்கன் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மரங்கள், விலங்கினங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ”மேற்கு தொடர்ச்சி மலை கன்னியாகுமரி முதல் குஜராத் வரை சுமார் 1.6 லட்சம் சதுர கி.மீட்டராக பரந்து விரிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 28,200 சதுர கி.மீ, கர்நாடகாவில் 43,300 சதுர கி.மீ, மகாராஷ்டிராவில் 58,400 சதுர கி.மீ, கோவாவில் 1,075 சதுர கி.மீ, கேரளாவில் 28,100 சதுர கி.மீட்டராக இருக்கிறது. இந்த பகுதிகளில் இருக்கும் ஏராளமான இயற்கை வளங்கள் தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களால் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் நிர்வாகிகளால் மட்டுமல்ல, பொதுமக்களாலும் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் தனஞ்சய காட்கில் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவை அமைத்தது. அவர் மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்பான அறிக்கையை 2011ல் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கஸ்தூரிரங்கன் குழுவின் மற்றொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை” என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
”கிழக்குத் தொடர்ச்சி மலைகள், வடக்கு ஒடிசாவில் இருந்து ஆந்திரா கர்நாடகா வழியாகத் தமிழ்நாடு வரை செல்கின்றன. இது மேற்குத் தொடர்ச்சி மலை போல் உயர்ந்ததாக இல்லை என்றாலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், மலைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை உள்ளன.
இந்த மலையில் இருக்கிற பெரும்பாலான அடர்ந்த காட்டுப் பகுதிகள் தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1982 மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி வனத்துறையால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் சில பகுதிகள் தமிழ்நாடு மலைப்பிரதேசங்கள் (மரங்களைப் பாதுகாத்தல்) சட்டம் 1955ன் கீழ் உள்ளது. ஆனால் இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை.
இதன் விளைவாகத் தனியார் வசம் உள்ள இடங்களில் இருக்கும் மரங்களின் பாதுகாப்பு என்பது சவாலாக இருக்கிறது. சட்டம் மற்றும் அரசாங்கத்தின் விதிகளில் இருக்கும் ஓட்டைகளால் இங்குள்ள மரங்கள் ரகசியமாக வெட்டப்பட்டு அகற்றப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளால் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் தரிசாக உருவாகியிருக்கிறது. இதனால் அங்குள்ள நீரோடைகள் வறண்டு போவது மட்டுமின்றி பல்லுயிர்களும் படிப்படியாக மறைந்து வருகிறது” என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மலைகளில் காபி, தேநீர் மற்றும் பழத்தோட்டங்கள் ஆகியவை பெரிய அளவில் உள்ளன. சந்தனம் உள்ளிட்ட நறுமணமுள்ள மதிப்புமிக்க மரங்கள் சட்டவிரோதமாக அகற்றப்படுகின்றன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இருந்தபோதிலும், வேட்டையாடுதல் போன்றவையும் நடந்து வருகிறது. இதனால் காடுகள் சீரழிந்து வருகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசாங்கத்தால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் காகித அளவிலேயே இருக்கிறது. எனவே நீதிமன்றம் தலையிட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
**கவிபிரியா**�,