zஸ்டாலின் பேச்சு: களத்தில் குதிக்கும் ராமதாஸ்

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுகவுக்கு ஆதரவாக அங்கு ராமதாஸும் களமிறங்குகிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாங்குநேரியில் கடந்த 8ஆம் தேதி ஆரம்பித்த திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு 3 நாட்கள் வரை காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டியில் இன்று (அக்டோபர் 12) விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்திக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

**ஸ்டாலின் நகரில் ஸ்டாலின்**

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகரில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளைக் கேட்டுக்கொண்டார். அவரிடம் பேசிய பெண்கள் சாலை வசதி இல்லை என்றும், கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், பட்டா வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர், “அனைவரும் உங்களது பெயரில் உள்ள நகரில்தான் நாங்கள் உள்ளோம் என்று கூறினீர்கள்.தமிழகத்தில் எதை மறந்தாலும் இந்த ஸ்டாலின் நகரை இனி என்னால் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கிய ஸ்டாலின்,

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்துள்ளனர். இதற்காக அந்த பகுதியை சிங்கப்பூரை விட மேம்பட்ட அளவுக்கு ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரதமர் வருகிறார் என்றவுடன் தற்போது இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

**திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்**

“8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக இதையெல்லாம் முன்னரே செய்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்துமுடிக்க உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், சேர்மன் இருந்திருந்தால் அவர்களே இந்தப் பணிகளை செய்துமுடித்திருப்பார்கள். நீங்கள் சொன்னது சின்ன பிரச்சினைகளையும் அவர்களே சரிசெய்துவிடுவார்கள். ஆனால், இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. திமுக வெற்றிபெற்றுவிடும் என்ற தோல்வி பயம் காரணமாகத்தான் தள்ளிவைத்துக்கொண்டே வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்” என்று உறுதியளித்தார். அதன்பிறகு தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் மக்களுடன் கலந்துரையாடினார்.

**களத்தில் குதிக்கும் ராமதாஸ்**

ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தமுள்ள 2,23,178 வாக்காளர்களில் 95,275 பேர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பாமக பலமாக உள்ள இந்த தொகுதியில் முதலில் ராமதாஸ் பிரச்சாரம் செய்வதற்கு திட்டமிடப்படவில்லை. அன்புமணி ராமதாஸும் ஒருநாள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட இருந்தார். ஆனால், வன்னியர்களுக்கு திமுக செய்த நன்மைகளை பட்டியலிட்டு ஸ்டாலின் வெளியிட, அதற்கு ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட, திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே அறிக்கை போர் தொற்றிக்கொண்டது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாமக நிர்வாகிகள் மட்டுமே பணியாற்றிவந்த நிலையில், இந்த அறிக்கை விவாதங்களுக்குப் பிறகு ராமதாஸே நேரடியாக பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கிறார்.

தற்போது 80 வயதைக் கடந்து முத்துவிழா கொண்டாடினார் ராமதாஸ். அதனால் அவரிடம், ‘நீங்கள் எதற்கு வந்துகொண்டு. நாங்களே பிரச்சாரத்தை பார்த்துக்கொள்கிறோம்’ என அன்புமணி சொல்லியிருக்கிறார். ஆனால், ‘நான் அறிக்கையில் சொல்லிய விஷயங்களை நம் மக்களிடம் நேரில் சொல்ல வேண்டும். தேர்தல் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டாலும் தொகுதியில் பாமக சரியாக செயல்படவில்லை என அதிமுக நினைத்துவிடும். ஆகவே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நானே பிரச்சாரத்தில் ஈடுபடுகிறேன்’ என்று கூறிவிட்டார்.

இதுதொடர்பாக பாமக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “விக்கிரவாண்டி தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வரும் 15ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அன்புமணி ராமதாஸ் வரும் 14ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் நீண்ட இடைவெளிக்குப் பின்னரே அதிமுகவுக்கு பாஜக ஆதரவளித்தது. இந்த நிலையில் மோடியை சந்தித்து வந்த பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக பாமக செயல்படுமா என்று எடப்பாடி நினைத்திருக்கிறார். எனவே இந்த சந்தேகத்தை போக்கும் விதத்திலும் ராமதாஸின் பிரச்சாரம் அமையும் என்கிறார்கள் பாமகவினர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share