மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றதற்கான ஆவணங்களை ஸ்டாலின் வெளியிட வேண்டுமென அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக சர்ச்சை உண்டான நிலையில், அதுகுறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை என்றும், மேலும் சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு நாட்களாக திமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். எனினும் போராட்டத்தைக் கைவிடும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததோடு, மாஃபா பாண்டியராஜனுக்கு சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 8) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அவரிடம் இருக்கும். அதன் நகல்கள் நீதித் துறையிடமும், ஆவண காப்பகத்திலும் இருக்கும். இதனை கண்டிப்பாக எடுத்து வெளியிடுவோம். அதற்கு முன்பாக அவரே அதனை வெளியிட்டிருக்கலாம்.
23 வயதில் மிசாவில் அடிபட்டு ஜனநாயகத்தை காப்பதற்காக ஸ்டாலின் தியாகம் செய்தார் என்பது அவரது வரலாற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதில் சில கேள்விகள் எழுந்தன. அதையும் நாங்கள் எழுப்பவில்லை. முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் ஊடகம் ஒன்றில் நெறியாளர் கேட்கிறார். ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லையே என்ற கேள்விக்கு, பொன்முடி இதுபற்றி தனக்கு தெரியாது என பதிலளிக்கிறார். இருக்கிறதா அல்லது இல்லையா என்று அவர் பதிலளிக்கவில்லை. அதனடிப்படையில்தான் எனது சந்தேகத்தை முன்வைத்தேன்” என்று தெரிவித்தவர்,
“அப்படி இல்லையென்றால் ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றதற்கான ஆவணங்களை வெளியிடலாம் அல்லவா? அதனை சொல்லாமல் போராட்டங்களிலும் கொடும்பாவி எரிப்பிலும் ஈடுபடுகிறார்கள். திமுகவினரின் ஒவ்வொரு கேள்விகளுக்கு தகுந்த சான்றுகளுடன் இரண்டு நாட்களுக்குப் பிறகு விரிவான பதிலை நான் அளிக்க இருக்கிறேன்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இஸ்மாயில் கமிஷனிலும், மறைந்த செழியன் மிசா கொடுமைகள் தொடர்பாக எழுதிய புத்தகத்திலும் ஸ்டாலின் பெயர் இல்லை. மிசாவின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான எந்த குறிப்புகளும் இல்லை. அதிமுகவிலிருந்து ஒரு கேள்வி எழுப்பியுள்ளோம். அதற்கு பதிலளிக்க வேண்டியது எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் பொறுப்பு. இஸ்மாயில் கமிஷன், ஷா கமிஷன், செழியன் புத்தகம் ஆகியவற்றில் ஸ்டாலின் பற்றி எதுவும் குறிப்பிடப்படாதது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
�,