மொபைல் டேட்டா ஆனில் இருந்தது வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. “உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம் என்றும், திமுகதான் தடுத்து நிறுத்த திட்டமிடுகிறது என்றும் தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
திமுக தரப்பிலோ உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை திமுக என்றைக்கும் விரும்பாமல் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் உள்ளாட்சித் தேர்தல் நெடுங்காலமாய் நிறுத்தப்பட்ட நிலையில் திமுகதான் அதை தொடர்ந்து நடத்துவதற்கு அடிகோலியது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக ,முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு தவிர உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதல்ல என்று விளக்கம் சொல்கிறார்கள்.
இப்போதைய நிலையில் அதிமுகவின் ஆளுங்கட்சி பலத்தோடு ஏகப்பட்ட குழப்பங்களோடு உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அது சரியாக இருக்காது என்பதும் திமுகவின் கருத்து. இதையெல்லாம் விட வெளியே வெளிப்படையாக சொல்ல இயலாத முக்கியமான காரணம் திமுகவின் நிதிநிலைமைதான்.
உள்ளாட்சித் தேர்தலில் கரன்சி வெள்ளத்தை பாய்ச்சுவதற்கு ஆளும் கட்சியான அதிமுக தயாராக இருக்கும் நிலையில் திமுகவோ இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அதிமுகவை எதிர்கொள்ள முடியாமல் தயங்கி நிற்கிறது. இதுபற்றி திமுக தலைமைக்கு நெருக்கமான சிலர் பகிர்ந்துகொண்ட விபரங்கள் அதிர வைக்கின்றன.
திமுகவை பணக்கார கட்சி என்று சமீபத்தில் கூட அமைச்சர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். திமுகவில் உள்ள பற்பலர் மிகப்பெரிய பணக்காரர்கள் தான். ஆனால் கட்சி என்ற அளவில் பார்த்தால் திமுக இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்களிடம் கட்சி நிதி என்று தலைமை வாங்கியது உண்மைதான். அவையெல்லாம் முதலீடு செய்யப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் கரன்சி வடிவில் கொண்டுவருவதில் திமுகவுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலினை தொழிலதிபர்கள் டாட்டா ,முகேஷ் அம்பானி போன்றோர் சந்தித்து விட்டுச் சென்றார்கள். அப்போதே திமுகவுக்கு உதவ வேண்டாம் என தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு சார்பில் கடுமையான அழுத்தம் தரப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள், தலைமை அறிவித்த நிதி வருமா என்று தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் வரை காத்துக்கிடந்த அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். சில வேட்பாளர்கள் தலைமை அறிவித்த பணம் வராததால் கடைசி நாட்களில் கோடிகளை புரட்ட கடுமையான நெருக்கடியை சந்தித்தார்கள். இந்தச் செய்திகள் எல்லாம் வெளிப்படையாக வராது. கட்சியே கூட நாடாளுமன்ற தேர்தலுக்காக சில இடங்களில் கடன் வாங்கி இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட அனைத்து மாசெக்களிடமும், எம்.எல்.ஏ.க்களிடமும் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போது அடுத்த சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு என்ன செய்வது என்ற தீவிர ஆலோசனை திமுகவின் டாப் லெவலில் நடந்து கொண்டுள்ளது. அதற்கு முன் உள்ளாட்சி தேர்தல் என்ற செலவை எப்படி கடக்கப் போகிறோம் என்பதுதான் கட்சியின் இப்போதைய சிந்தனை.
ஒவ்வொரு மாநகராட்சியிலும் அதிமுக சார்பில் அந்தந்த அமைச்சர்கள் முழுவீச்சில் வேலைகளை தொடங்கி விட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அதனால் பணத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் திமுக தரப்பிலோ உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் செலவுக்கு ஈடு கொடுக்க முடியுமா என்ற நிலைமை. இதுதான் முக்கிய காரணம் என்றாலும் உள்ளாட்சித் தேர்தலில் பல குழப்பங்கள் இருப்பதால் அந்த காரணத்தை வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திமுக தீவிரம் காட்டி வருகிறது”என்ற செய்திக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ்அப்.�,”