மாசெக்கள் கூட்டத்தில் துரைமுருகன் மிஸ்ஸிங் ஏன்?

Published On:

| By Balaji

நேற்றைய பொதுக்குழுவைத் தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இன்று (நவம்பர் 11) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பங்கேற்கவில்லை. உடனே , ‘ஏற்கனவே தளபதிக்கும் துரைமுருகனுக்கும் மனஸ்தாபம் இருந்துச்சு. பொதுக்குழுவுல தான் எதிர்பார்த்த சில அதிகார மாற்றங்கள் நடக்காததாலதான் துரைமுருகன் கூட்டத்தைப் புறக்கணிச்சிட்டாரா?” என்று அறிவாலயத்திலேயே சில குரல்கள் எதிரொலித்தன.

ஆனால்,காரணம் வேறு!

திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் இன்று (நவம்பர் 11) மீண்டும் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

[பொதுக்குழுவுக்காக சிகிச்சையை தள்ளிப்போட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/11/08/102/duraimurugan-postponed-medical-tratement-for-participate-dmk-generalbody-meeting)என்ற தலைப்பில் நவம்பர் 8 ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தனது வீட்டுகு அருகே உள்ள பூங்காவில் நவம்பர் 6 ஆம் தேதி காலை வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ‘64 ஸ்லைஸ் சிடி ஸ்கேன்’ என்ற சோதனையை நடத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது இதயத்தின் செயல்பாடுகளை பல்வேறு கோணங்களில் துல்லியமாக ஸ்கேன் செய்து பார்ப்பதுதான் இந்த சோதனை. இந்த சோதனைக்குப் பிறகு, ‘இதயத்தில் சிறு அடைப்பு இருக்கிறது. ஆஞ்சியோ பண்ண வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பொதுக்குழுவை காரணம் காட்டி மறுத்துள்ளார் துரைமுருகன்.

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி நவம்பர் 10 ஆம் தேதி பொதுக்குழுவில் பங்கேற்றுவிட்டு இன்று அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார் துரைமுருகன்.

இதனால் இன்று (நவம்பர் 11) அறிவாலயத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ஸ்டாலினிடம் முன்னதாகவே பேசிய துரைமுருகன், ‘ஆஞ்சியோ பண்ணனும்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. பொதுக்குழு முடிஞ்சு பாத்துக்கலாம்னு சொல்லிட்டேன். அதனால நாளைக்கே அட்மிட் ஆகிடுறேன்’ என்று சொல்ல, ‘முதல்ல உடல் நலத்தைப் பாத்துக்கங்கண்ணே’என்று துரைமுருகனிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

அதன் அடிப்படையிலேயே இன்றைய மாசெக்கள் கூட்டத்துக்கு வராமல் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் துரைமுருகன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share