திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் கைரேகை விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐயிடம் திமுக மனு அளித்துள்ளது.
2016 நவம்பர் 19ஆம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் ஏ.கே.போஸும், திமுக சார்பில் மருத்துவர் சரவணனும் தேர்தலில் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் சமர்பித்த வேட்புமனுவின் ‘பி’ படிவத்தில் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாக கைரேகை இடம்பெற்றிருந்தது. இடைத் தேர்தல் முடிவில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜெயலலிதா கைரேகை தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து, திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும் அதனால் ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்றும் தீர்ப்பளித்தார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் சரவணன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு இன்று (அக்டோபர் 18) வழக்கறிஞர்களுடன் சென்ற எம்.எல்.ஏ சரவணன், ஜெயலலிதாவின் கைரேகை விவகாரம் தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், “2016ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயலலிதா கைரேகையை முறைகேடாக பெற்று அதை அங்கீகரிக்க செய்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்தும் அதிகாரி ஜீவா, மருத்துவர் பாலாஜி, அப்பலோ மருத்துவர்கள் பாபு ,ஆப்ரகாம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது கிரிமனல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தனது மனுவில் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.�,”