கடந்த மக்களவை தேர்தலில் எந்தக்கூட்டணியில் சேர்வார் என்று சலிக்க சலிக்கப் பேச வைத்து, கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் வைத்து அதிமுக அணியில் சேர்ந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அப்போதே பாமகவுக்கு இணையான சீட்டுகள் தங்களுக்கு வேண்டுமென்று கேட்டு சலசலப்புகளும் சர்ச்சைகளும் தேமுதிக -அதிமுக இடையே எழுந்தன.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று தேமுதிக முடிவெடுத்துவிட்ட நிலையில், அதிமுகவை முந்திக்கொண்டு சுதீஷ் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவையும் நியமித்துவிட்டது.
தேமுதிக சார்பில் குழு அமைக்கப்பட்டுவிட்டாலும், அதிமுக சார்பில் இன்னும் தோழமைக் கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக இன்னும் முறைப்படி பேச ஆரம்பிக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுக முக்கியப் பிரமுகர்களிடம் பேசிய தேமுதிக குழுவினர், “மக்களவைத் தேர்தல் மாதிரி கசப்பான சம்பவங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாதுனுதான் நாங்க முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு தயாராயிட்டோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செஞ்சாரு. இந்த நிலைமையில உள்ளாட்சிப் பதவிகள்ல 25% இடங்களை கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கணும்” என்று எடுத்த எடுப்பிலேயே வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
இதை எதிர்பார்க்கமல் அதிர்ச்சி அடைந்த அதிமுக தரப்பினர், “ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநாடு போயிருக்காரு. அவர் வந்துடட்டும். முறைப்படி உட்கார்ந்து பேசிக்கலாம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போதைய நிலவரப்படி தேமுதிகவோடு பத்து சதவிகித இடங்கள் என்ற அளவில்தான் பேச்சுவார்த்தையை துவக்க முடிவு செய்திருக்கிறது அதிமுக. அந்த பத்து சதவிகிதமும் மொத்த இடங்களிலுமல்ல… தேமுதிகவுக்கு எங்கே செல்வாக்கு இருக்கிறதோ அங்கே மட்டும்தான் பத்து சதவிகிதம் என்பதுதான் அதிமுகவின் கணக்கு.
ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பிய பிறகு இரு கட்சியினரும் உட்கார்ந்து பேசும்போது சலசலப்புகளும், சர்ச்சைகளும் மீண்டும் எழுந்தாலும் ஆச்சரியமில்லை .�,