aகாற்று மாசு: டெல்லி, சென்னையின் நிலை!

Published On:

| By Balaji

டெல்லி மற்றும் நொய்டாவில் தீபாவளி நாளில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான அளவை எட்டியது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசு ஓரளவு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லி மற்றும் அருகில் உள்ள நொய்டா நகரில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவில் காற்று மாசு குறியீடு 50க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால், நேற்று (அக்டோபர் 27) இரவு நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306, நொய்டாவில் 356 என மிக மோசமான நிலையில் இருந்தது. இது மோசமான அளவை குறிப்பதாகும்.

காற்றின் மாசு அதிகரித்ததால் டெல்லியில் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக காற்று மாசின் அளவு 198 ஆக உள்ளது. தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களாக பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னை நகரம் முழுவதும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையில் எங்கும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு சற்று குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share