�
தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையில் மெட்ரோ ரயில்களில் பயணிகளைக் கவரும்படி வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு, சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கான ஏற்பாடாக பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, நேர நீட்டிப்பு, கட்டணக் குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான சேவைகளை வழங்குகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையில் தீபாவளியையொட்டி இரு தினங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் (அக்டோபர் 26, 27) 50 சதவிகிதக் கட்டண சலுகையை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியுள்ளது. இதேபோல், அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் வண்ணமயமான கோலங்கள், தீபாவளி வரைபடங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்களில் ஒளிவிளக்குடன் கூடிய தீபாவளி வண்ண ஓவியங்களை ஒட்டி பயணிகளைக் கவரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கு ‘வண்ணமயமான தீபாவளி’ என்ற பெயரை நிர்வாகம் சூட்டியுள்ளது.
விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் – பரங்கிமலை வரையிலான வழித்தடத்தில் இந்த ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 15 மெட்ரோ ரயில்களை இவ்வழித்தடத்தில் நேற்று (அக்டோபர் 25) முதல் இயக்கி வருகிறது.
�,