தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்களில் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று டாஸ்மாக் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மதுபானங்களை இத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்யும். இந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிகம் எட்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது டாஸ்மாக். விலைவாசி உயர்வு, தொழில் சுணக்கம் ஆகியவற்றால் பெரிய அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மதுபான விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது டாஸ்மாக்.
வெள்ளிக்கிழமை அன்று 100 கோடி ரூபாய்க்கும், சனிக்கிழமை 183 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக்கிழமை 172 கோடி ரூபாய்க்கு என மூன்று நாட்களில் மொத்தம் 455 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளுக்குத் தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இலக்காக 360 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இதுகுறித்த செய்தியை மின்னம்பலத்தில் [தீபாவளி: மதுவிற்பனைக்கு ரூ.360 கோடி இலக்கா?](https://minnambalam.com/k/2019/10/22/86/diwali-2019-liquor-Sales-target-tasmac-minister-reply) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு, அக்டோபர் 22ஆம் தேதி பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, “தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இலக்காக 360 கோடி நிர்ணயித்திருப்பதாகச் சொல்லப்படும் செய்தி முற்றிலும் தவறானது. இந்த வதந்தியின் மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன்கூட கண்டனம் தெரிவித்திருக்கிறார். விழாக்களுக்கு இலக்கு நிர்ணயித்து எந்த ஆண்டும் விற்பனை செய்யப்படுவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
எனினும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வதந்தியாகப் பரவிய தொகையைக் காட்டிலும் அதிகம் வசூல் செய்து டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 325 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு 130 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது டாஸ்மாக்.�,